தோட்டத்தொழிலாளியின் குடியிருப்பில் இருந்து நாகப்பாம்பு கண்டுபிடிப்பு
ஹட்டன் - பன்மூர் தோட்டத்தின் தொழிலாளர் குடியிருப்பு ஒன்றின் அறையிலிருந்து நாகப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 அடி நீளமான இந்த பாம்பு அறையில் காணப்படும் கட்டு ஒன்றின் மீது காணப்பட்டுள்ளது.
இது சாரை பாம்பு என்று ஊகித்த வீட்டு நபர் அதனைப் பிரம்பு ஒன்றினால் வெளியில் தள்ளிவிட முயன்ற போது அது தனது தலையினை விரித்த நிலையில் அது நாகப்பாம்பு என்பதை அறிந்து நிலை தடுமாறியுள்ளார்.
உடனே தனது சகோதரனின் உதவியுடன் அந்த நாகப்பாம்பை ஒரு பிளாஸ்டிக் வாளியினுள் செல்லச் செய்து பாதுகாப்பாகப் பிடித்துள்ளார்.
இந்த பிரதேசத்தில் நாகப்பாம்பு காணப்படுவதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை காணப்பட்டுள்ள போதும் இன்றே அதனைத் தாம் நேரில் கண்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைப் பார்வையிட அதிகளவானவர்கள் இவரின் வீட்டிற்கு வருகைதந்ததுடன், அவர்கள் நெருக்கமாகக் காணப்படும் தேயிலை செடிகளிடையே தாம் சென்று கொழுந்து கொய்வதற்கு தற்போது பயம் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் குளிர் காலநிலையில் இவ்வாறான விச பாம்புகள் காணப்படுவது மிக மிக அரிதான விடயமாக உள்ளதுடன், தற்போது நாகப்பாம்பின் குட்டி கண்டுபிடிக்கப்பட்டதானது இப்பகுதி மக்களை பெரும் அச்சத்திற்குத் தள்ளியுள்ளது.
பெரிய நாகப்பாம்புகளும் காணப்படக்கூடும் என்று அச்சப்படுகின்றனர்.
இது தொடர்பாக ஹட்டன் பொலிஸாருக்கும், வன ஜீவராசிகள் திணைக்கள காரியாலயத்திற்கும் அறிவித்த நிலையில், அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலுக்கு ஏற்ப இப்பகுதிக்கான கிராம உத்தியோகத்தருடன் கலந்துரையாடி, மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் இதனைப் பாதுகாப்பாக விடுவதற்கு வீட்டின் உரிமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



