தடைப்பட்ட பாரிய கப்பல்களின் வருகை: வெளியான தகவல்
தற்போது நிலவும் மின்வெட்டுகளின் கீழ் பெப்ரவரி மாதம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி இருப்பு போதுமானது என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வரவிருந்த ஏழு நிலக்கரி கப்பல்களில் 6 கப்பல்களே இலங்கைக்கு வந்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் 7 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இம்மாதம் 5 கப்பல்கள் மட்டுமே நாட்டுக்கு வந்தடைய உள்ளது.”என கூறியுள்ளார்.
கஞ்சன விஜேசேகரவிற்கு கடிதம்
இதேவேளை, நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையில் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க, நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் இலங்கை நிலக்கரி நிறுவனம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.
அந்த கடிதத்தில், ஜனவரி 30 முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிலக்கரிக்காக 12.32 மில்லியன் டொலர்கள் அதாவது 4.56 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஒரு பகுதியை வழங்குநர்களுக்கு செலுத்த முடியும் என்றாலும், வேறு சில கப்பல்களுக்கு முற்பணம் மற்றும் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டுமென நிலக்கரி நிறுவனம் உரிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.