இலங்கையில்15,000 பேருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்: வெளியான காரணம்
நாட்டில் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் (Crude Oil) இறக்குமதியாளர்களிடமிருந்து அறவிடப்படும் வரியை (SSCL) கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபாவால் அதிகரிப்பது மற்றும் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்புக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரியை நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனால், தற்போது துறைமுகத்தில் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு கிலோ ஒன்றுக்கு 125 ரூபா அறவிடப்படுவதுடன், எதிர்காலத்தில் இது 130 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை (02) நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு கிலோவிற்கு 150 ரூபா சமூக பாதுகாப்பு வரியை மேலும் 10 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் இறக்குமதி
இதனால், சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு கிலோவுக்கு விதிக்கப்படும் சமூக பாதுகாப்பு வரி 160 ரூபாயாக உயரும்.
சுத்திகரிக்கப்படாத ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அறவிடப்படும் 125 ரூபா, சமூக பங்களிப்பு பாதுகாப்பு வரிக்கு மேலதிகமாக, நாட்டில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட பின்னரும் செலுத்த வேண்டியிருப்பதால் 09 தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் 07 மூடப்பட்டுள்ளன.
இவ்வாறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், சுமார் 15,000 பேருக்கு வேலை கிடைப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை
சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலையும் 540 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு வட் வரி விதிக்கப்படாததால், வியாபாரிகளுடன் சேர்ந்து தேங்காய் எண்ணெய் இருப்புக்களை மறைத்து விலையை உயர்த்தும் மோசடியில் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், அதிகரித்து வரும் தேங்காய் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் வகையில், நாட்டில் உள்ள தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து VAT அறவிடப்படாமல் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சு கலந்துரையாடியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |