கிழக்கு மாகாண இறைச்சி விற்பனை நிலையங்கள் தொடர்பில் ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள் தவிர) இன்று (12.12.2022) முதல் ஒரு வார காலத்திற்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை குறிப்பிட்டு மட்டக்களப்பு, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை நகரசபை பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள் தவிர) இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் அண்மையில் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் குளிர் காலநிலை காரணமாக பல இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தமை தொடர்பில் பல செய்திகள் வெளியாகி இருந்தன.
இதனை தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிய இரசாயன பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரணிலின் உத்தரவு
இதேவேளை மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.
நாட்டில் ஏற்பட்டிருந்த சீரற்ற காலநிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விலங்குகள் பல உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இதனடிப்படையில், பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

