தூய்மையான மாகாணமாக வடமாகாணம் அமையுமா: தொடரும் சுட்டிக்காட்டல்கள்
A9 வீதி வழியே பயணிக்கும்போது மனவெறுப்பு செயற்பாடாக வீதியின் ஓரத்தில் குப்பைகள் குவிக்கப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.
A9 பாதையில் கொக்காவில் பல்நோக்கு அலைபரப்பி நிலையத்தில் இருந்து மாங்குளம் நோக்கிய திசையில் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் வீதியின் வலது பக்கத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
வீதியால் பயணிக்கும் போது கட்புலனாகும் வகையில் இது இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கழிவுகள் முகம் சுழிக்க வைக்கும் என்பது கருத்திலெடுக்கப்படவில்லை என சமூகவிடய ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
உடல்,உள, சமூக ஆரோக்கியம் முழுமை பெறும் போதே ஒரு மனிதன் நலமடைவதாக கருதி செயற்படும் சுகாதார துறையினர் இதுதொடர்பில் பாராமுகமாக செயற்படுவது கவலையளிக்கும் செயற்பாடாகும்.
வடக்கு நோக்கிப் பயணித்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம் செல்வோருக்கு இந்த குப்பைகள் குவிக்கும் இடம் கட்புலனாவதால் அது மனவுழைச்சலை ஏற்படுத்தும் என உளவளத் துறைசார்ந்தோரும் குற்றம் சாட்டுகின்றனர்.
யார் இதைச் செய்கின்றனர்
வீதிகளில் சாதாரண வீசப்படும் குப்பைகள் தொடர்பில் பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருவதனை அவதானிக்க முடியும்.
மக்களை பொறுப்பாக செயற்படுமாறும் குப்பைகளை வீதிகளில் வீசாதிருக்கும் படியும் வேண்டுகைகளை முன்வைத்து விழிப்புணர்வில் ஈடுபட்டுவரும் ஒரு பக்கச் செயற்பாடுகள் அரங்கேறி வரும் வேளையில் மற்றொரு பக்கம் பெருமளவு பிரதேச கழிவுகளை கொண்டு வந்து வீதியின் ஓரத்தில் கொட்டிவிட்டு செல்லும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஆளுகைக்குள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் அமையும் இந்த இடம் தொடர்பில் ஏன் இதுவரை கவனமெடுக்கப்படாது இருக்கின்றது என சுற்றுச் சூழலியல் ஆர்வலர்கள் பலர் கேள்வியெழுப்புவதோடு குறித்த பிரதேச செயலகங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
மனித குடித்தொகையின் அளவு அதிகரிக்கும் போது நுகர்வும் அதிகரிக்கும்.இதனால் ஏற்படும் கழிவுகளும் அதிகரிக்கும்.
நூறு பேர் கொண்ட மக்கள் குழுமத்தின் கழிவுகளை அகற்றுவது போல், ஆயிரம் பேர் கொண்ட மக்கள் குழுமத்தின் கழிவுகளை அகற்ற முடியாது.
கழிவுகளை அகற்றும் முயற்சி மற்றும் முறைமைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதோடு கழிவுகளை சூழல் நேயத்தன்மையோடு மீள்சூழற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பில் ஏன் பிரதேச செயலகம் உள்ளிட்ட மாவட்டச் செயலகம் கவனமெடுப்பதில்லை எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கொக்காவில் பல்நோக்கு அலைபரப்பி நிலையத்திற்கு அருகில் குவிக்கப்படும் குப்பைகள் தொடர்பில் முழுப் பொறுப்பையும் பிரதேச செயலகங்களே எடுத்துச் செயற்படும் கடப்பாட்டினை கொண்டுள்ள போதும் அவை பொறுப்பேற்றுச் செயற்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெருமளவான குப்பைகள் தனிநபர்களினாலோ அன்றி சிறு குழுக்களாலோ சிறிய நிறுவனங்களினாலோ குவிக்கப்படுவது சாத்தியமில்லை. ஒரு குறித்த இடத்தில் நீண்ட நாட்களாக அது மேற்கொள்ளப்படுவதும் முடியாத செயற்பாடாகும் என்பதும் நோக்கத்தக்கது.
இவற்றை உரிய அரசு நிறுவனங்கள் கவனமெடுக்க வேண்டும்.
மனவெறுப்பு ஏற்படுத்தும் செயற்பாடு
பொதுவாக சுத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுவது மனதை இன்புறச் செய்வதோடு உடல் ஆரோக்கியத்தினை பேணிக் கொள்வதற்கே! தொற்று நோய்களின் பரவலை தடுப்பதற்கும் இது உதவியாக அமைகின்றது.
வீடுகளிலும் பொது இடங்களிலும் மேற்கொள்ளப்படும் சுத்தமாக்கும் செயற்பாடுகளின் போது சேர்க்கப்படும் கழிவுகளை கட்புலனாகும் வகையில் குவிக்கப்படுவதில்லை என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
வருவோரை வரவேற்கும் முகப்பில் மனவெறுப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் பொருட்களையும் வைத்திருக்கும் இயல்பற்ற ஈழத்தமிழரிடையே குப்பைகள் மட்டும் பொருத்தமற்ற இடங்களில் வீசப்பட்டு இருப்பதும் குவிக்கப்படுவதும் இயல்பு மாறிப்போகும் செயற்பாடோ என சிந்திக்க தூண்டுகின்றது.
உடல் ஆரோக்கியத்தில் மனநிலை பெரும் பங்காற்றுகின்றது. எதை எடுத்தாலும் மனம் வெறுக்கும் நிலைப்பாடுகளை ஏற்படுத்தி விடுவோமானால் வாழ்வின் மீதும் பிடிப்பற்ற நிலையினை அது இலகுவாக உருவாக்கி விடும்.
இதனால் இலகுவான மனவுடைவுகள் ஏற்பட்டு தற்கொலைக்கான முயற்சிகளை அவை ஊக்கப்படுத்தி விடலாம் என உளவளதுறை சார்ந்த கல்வியலாளர்களுடன் இது தொடர்பில் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதும் அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
ஒன்று மற்றொன்றின் மூலமாகிப் போனால்; அதன் சிக்கல்தன்மை அதிகரித்துவிட்டால். அவற்றால் தோன்றும் சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதும் சிக்கல் தன்மையானதாகி விடும் என்பது கவனிக்கத் தவறிய விடயமாக ஈழப்பரப்பில் அதனை அவதானிக்க முடிவதாக சமூகவிடய ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
கட்புலனாகாத கழிவகற்றும் முறை
வடமாகாணத்தில் பல இடங்களிலும் கட்புலனாகும் முறையிலேயே கழிவுகளை குவித்து வைக்கின்றதனை அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சங்குப்பிட்டிப் பாலத்தினூடாக பூநகரிக்கு செல்லும் போது பாலத்தின் எல்லைக்குள் உள்நுழைவதற்கு முன்னுள்ள ஒரு பகுதியிலும் வீதியின் ஓரமாக பரந்த திறந்த வெளியில் கழிவுகளை குவித்துவைத்திருப்பதனையும் அவதானிக்கலாம். யாழில் இருந்து பூநகரிக்கு செல்லும் போது வீதியின் இடது பக்கத்தில் இந்த குப்பை மேடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
A9 வழியே மாங்குளம் நோக்கிப் பயணிக்கும்போது கொக்காவில் பல்நோக்கு அலைபரப்பி நிலையத்திற்கு சற்றுத் தொலைவில் வீதியில் வலது பக்கத்தில் ஒரு குப்பைமேடு இருப்பதனையும் அவதானிக்கலாம்.
முல்லைத்தீவு முள்ளியவளையில் தண்ணீரூற்று புளியடிச் சந்தியில் இருந்து புளியங்குளம் செல்லும் போது தண்ணீரூற்று சந்தியில் இருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில் வீதியின் இடது பக்கத்தில் குப்பைகள் குவிக்கப்பட்டு வருவதனையும் அவதானிக்கலாம்.
கற்பூரப்புல்வெளி மற்றும் கயட்டை மரக்காடுகளிடையே வீதியில் இருந்து சற்று உள்நோக்கிய இடமொன்றில் குப்பைகள் கொட்டப்பட்ட போதும் இப்போது வீதியின் ஓரமாகவே குப்பைகள் கொட்டப்படுவதனை அவதானிக்கலாம்.
இன்று குப்பைகள் கொட்டப்படும் இடம் இன்னும் கொஞ்ச காலம் உருண்டோடிவிட்டால் அந்த நிலங்கள் எல்லாம் மக்கள் குடியிருப்புக்கள் ஆகிப் போகலாம்.
இன்று கொட்டும் குப்பைகளை நாளை அகற்ற வேண்டிய இரட்டிப்பு வேலை தோன்றும்.கொட்டும் குப்பைகளில் அதிகளவானவை உக்கலாடையாத குப்பைகள் ஆகும்.
வடமாகாண செயலகம்
நிரந்தரமான செயற்பாட்டு நிர்வாக அலகாக வடமாகாண செயலகமும் வடக்கு ஆளுநர் செயலகமும் அமைந்துள்ளன.
வடமாகாண சபை இன்றைய சூழலில் இல்லை என்பதோடு அது வலுவற்ற அரசாங்கமொன்றில் நிரந்தரமான செயற்பாடுகளை முன்னெடுக்க பொருத்தமற்ற கட்டமைப்பு என்பதும் வெள்ளிடை மலை என்பது அரசியலறிவுள்ளவர்களுக்கு வெளிப்படை.நிரந்தரமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அவை உரிய முறையில் கண்காணிக்கப்படுவதும் அவசியம்.
வடமாகாணத்தில் வீதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதும் கட்புலனாகும் இடங்களில் குப்பைகளை குவித்து வைப்பதும் பொருத்தமற்றது என்பது உணரப்படுவதோடு அவற்றை தடுப்பதற்கான பொறுப்புவாய்ந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும். அத்தோடு பொறுப்புவாய்ந்த நிறுவனங்களால் அவை உணரப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
குப்பைகள் என்றவுடன் ஏளனமாக கருதுவதை விட்டு அச்செயற்பாட்டில் கலாச்சாரப் பண்பாடு கலந்திருக்கும் போது தூய்மையான மாகாணமாக வடமாகாணம் அமையும் என்பது அவதானிப்பாளர்களின் பொதுவான கருத்து என்பதோடு ஊடகவியலாளர்கள் என்ற அடிப்படையில் எமது எதிர்பார்ப்பும் ஆகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 12 February, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.