க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மூதூர் பிரதேசத்திலுள்ள கடற்கரைச்சேனை, ஹபீப்நகர் ஆகிய இரண்டு கடற்கரைப் பகுதிகள் இன்று (15) காலை சிரமதான மூலம் தூய்மைப்படுத்தப்பட்டன.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் செல்வரத்தினம் பிரகலாதன் தலைமையில் கடற்கரைப் பகுதிகள் சிரமாதனம் செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.
மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கடற்கரையில் காணப்பட்ட சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் குப்பை கூலங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உரிய முறைப்படி அகற்றப்பட்டது.
சிரமாதன நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இளக்கந்தை கிராமத்தில் ஆயுர்வேத வைத்திய முகாம்
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் - இளக்கந்தை கிராமத்தில் இன்று (15) இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் ஒன்று இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளையின் ஏற்பாட்டில், இடம்பெற்ற இந்த வைத்திய முகாமில் பல்வேறுபட்ட நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் அனுசரணையுடன் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டலின் கீழ், மூதூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் அனுசரணையோடு, இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் மிக அதிகளவான நோயாளர்கள் வருகை தந்து வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொண்டதுடன் அவர்களின் இரத்தம் மற்றும் குருதி அமுக்க பரிசோதனையையும் இலவசமாகப் பெற்றுக்கொண்டதுடன் உடல்வலி, உடற்பருமன், தோல் நோய்கள், நீரிழிவு, இரத்த அழுத்தம் பெண்கள் தொடர்பான நோய்கள், பக்கவாதம் போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கான வைத்திய ஆலோசனை மற்றும் மருந்துகளையும் இலவசமாக பெற்றுக்கொண்டனர்.
இந்த, இலவச மருத்துவ முகாமில், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் அமைப்பாளர் எம். ஜே. சப்ரான் கலந்து கொண்டார்.
கிண்ணியாவில் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
க்ளீன் ஸ்ரீலங்கா எனும் தேசிய வேலைத்திட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் (கி/மா), உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரின் ஆலோசனை வழிகாட்டலுடன் கிண்ணியா நகரசபையினால் தவிசாளர் எம்.எம்.மஹ்தியின் தலைமையில் இன்று (15) செயற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நகர சபை உறுப்பினர்கள் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் கடற்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸார், டீ.பி. ஜாயா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள், அண்ணல் நகர் சனசமூக நிலைய உறுப்பினர்கள் என பல தரப்பினர் பங்கேற்றனர்.
மூன்று கட்டங்களில் நடைபெற்ற இந்நிகழ்வானது பெரியாற்றுமுனை, தோனா சிறுவர் பூங்கா சுற்றுவட்டம், கடலூர் கோயிலடி கடற்கரையை அண்டிய பகுதிகள் என மூன்று பகுதிகளிலும் க்ளீன் ஸ்ரீலங்கா பணிகள் நடைபெற்றன.






