அடுத்த 5 வருடங்களுக்கு தொடர்ந்து செயல்படவுள்ள ஜனாதிபதியின் திட்டம்!
ஜனாதிபதியின், க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்ற உறுதியை வழங்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் திட்டம்
கொழும்பில் நேற்று(08.02.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,'' நாடு முழுவதும் 1,740 கிலோமீற்றர் கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியின் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு, க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், “அழகான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்" என்ற கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.
அழகான கடற்கரை
இதற்கமைய, இன்றைய தினம் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த புதிய கருப்பொருளுக்கமைய, மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 14 இடங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் 23 இடங்களிலும், கம்பஹா மாவட்டத்தில் 24 இடங்களிலும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் 5 இடங்களிலும், மாத்தறை மாவட்டத்தில் 15 இடங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 43 இடங்களிலும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.''என்று க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.