புதுக்குடியிருப்பு பகுதியில் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட முரண்பாடு (Video)
நீண்ட நாட்களுக்கு பின் புதுக்குடியிருப்பு மக்களுக்கு 500 சமையல் எரிவாயு கொள்கலன்கள் வழங்கப்பட்டுள்ளன.
எரிவாயு கொள்கலன்களை கிராமங்கள் தோறும் கிராம சேவையாளர்களால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, டோக்கன் முறைப்படி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எரிவாயு விநியோகத்தில் முரண்பாடு
கிடைக்கப்பெற்ற எரிவாயுவில் அரச உத்தியோகத்தர்களுக்கு 170 என ஒதுக்கப்பட்ட போதும் அதிகளவான மக்கள் கூட்டத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகளவிலான மக்கள் எரிவாயுவினை பெற்றுக்கொள்ள வந்திருந்த நிலையில் அவர்களுக்கு எரிவாயு கிடைக்காததால் வாகனத்தினை எடுக்கவிடாமல் சூழ்ந்து கொண்டுள்ளார்கள்.
பிரதேச செயலாளரின் தலையீடு
பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அரச உத்தியோகத்தர்களுக்கு வைத்திருந்த எரிவாயுவில் ஒரு தொகுதியினை மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ள போது மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இருந்தும் வருகை தந்த மக்கள் அனைவரும் தங்களுக்கு எரிவாயு கிடைக்க வேண்டும் என சூழ்ந்து கொண்டுள்ளதால் கொட்டும் மழையிலும் மக்கள் நின்று எரிவாயுவினை பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
குறித்த இடத்தில் ஒன்று கூடிய மக்களின் உறுதியான முடிவினால் வந்த அனைத்து மக்களும் எரிவாயுவினை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் குற்றச்சாட்டு
எரிவாயு வழங்கும் நடவடிக்கையினை பிரதேச செயலகம் பொறுப்பு எடுக்கவில்லை என்றால் பொது இடத்தில் எரிவாயு நிறுவனம் பொலிஸ் அல்லது இராணுவத்தின் பாதுகாப்புடன் கொடுக்கப்பட வேண்டும்.
சரியான திட்டம் இல்லாத காரணத்தினால் கிராம சேவையாளர்கள் தங்கள் உறவினர்களுக்கு எடுத்துக்கொடுகின்றார்கள் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.