அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை
வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின்படி அரச சேவையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்று விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள்
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, அரச ஊழியர் ஒருவருக்கு, தற்போதைய வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக, 7,800 ரூபாவுடன், 5,000 ரூபாய் சேர்த்து, 12,800 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஏப்ரல் மாதம் முதல் வாழ்க்கைச் செலவான ரூ.12,800 உடன் ரூ.5,000 சேர்த்து ரூ.17,800 வழங்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை நிலுவையில் உள்ள வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2025 ஜனவரி முதல் மார்ச் வரை மாதாந்தம் 5,000 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டுமென பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் ஆதரவற்றோர் ஓய்வூதிய பங்களிப்பாக அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 8 வீதம் அறவிடப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
ஓய்வூதிய கொடுப்பனவு
இதற்கிடையில், பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள், சாதாரண தொழிலாளர்கள் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட பணியாளர்களுக்கு இந்த வாழ்க்கை கொடுப்பனவு செல்லுபடியாகும் என்று கூறப்படுகின்றது.
மேலும், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, ஓய்வூதியர்களுக்கு தற்போது வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஓய்வூதியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 3,525 ரூபாவில் இருந்து 6,025 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |