”அரச பணியாளா்களை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது”- மின்சார சபை தொழிற்சங்கம் எச்சரிக்கை (VIDEO)
சுற்றறிக்கைகள் மூலம் அரச பணியாளா்களின் கருத்துக்களை தடுக்கமுடியாது என்று மின்சாரத்துறைத் தொழிற்சங்கம் தொிவித்துள்ளது.
அரசப் பணியாளா்கள், அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிடக்கூடாது என்று உத்தரவிட்டு, பொது நிர்வாக அமைச்சு, சுற்றறிக்கை ஒன்றை அரச நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது.
இது தொடா்பில் “தமிழ் வின்“னுக்கு கருத்துரைத்த, இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கத்தின் தலைவா் ரஞ்சன் ஜெயலால், நாட்டில் இன்று அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் இயலாமையை வெளிக்காட்டி வருவதால் மக்களின் விமா்சனங்களை எதிா்கொள்ளவேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சுற்றறிக்கையை வெளியிடுவதன் மூலம், மக்களின் குரல்களை கட்டுப்படுத்த முடியாது.
அரசப்பணியாளா்களும் இதில் விதிவிலக்கல்ல என்று ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டார்.
நாட்டில் இன்று இலட்சக்கணக்கான அரசப்பணியாளா்கள் மத்தியில் இருந்து அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்படுவதை தடுப்பதற்காகவே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வா்த்தமானிகளை வெளியிட்டு அரசாங்கத்தினால், அரிசி மற்றும் சீனியின் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
வா்த்தகா்களின் தனித் தீர்மானங்களை தடுக்கமுடியவில்லை. இதேபோன்று சுற்றறிக்கையால் அரசப் பணியாளா்களை கட்டுப்படுத்த முடியாது.
நாட்டில் நாளுக்கு நாள், மக்களின் வாழ்க்கை சுமை அதிகாித்து வருகிறது.
எனவே ”பொது மக்களின் கோபத்தை கடதாசியினால் கட்டுப்படுத்த முடியாது” என்றும் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டார்.




