தமிழர் பகுதியில் சிங்கள குண்டர்களால் தாக்கப்பட்ட இளைஞர்.. சிஐடி விசாரணைக்கு அழைப்பாணை
திருகோணமலை - தம்பலகாமம் பகுதியை சேர்ந்த அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வரக்கோரி அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பானை, நேற்றைய தினம் (14.07.2025) தம்பலகாமத்தை சேர்ந்த கனேசலிங்கம் சிந்துஜன் (35) என்ற இளைஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த நபரை இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வரக்கோரி அழைக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் ஊர்தி
2023ஆம் ஆண்டு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தரும் பொழுது அதன் மீது சர்தாபுரம் என்ற இடத்தில் வைத்து சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நபரே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராகவும் குறித்த நபர் களமிறங்கி இருந்தார்.
தியாக தீபம் திலீபனது ஊர்தி தாக்கப்பட்ட விவகாரத்தில் குறித்த வழக்கு முறையற்ற விதத்தில் இடம்பெற்றிருந்தமையும், தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் முறையற்ற விதத்தில் விடுதலை செய்யப்பட்டமையும் பல்வேறுபட்ட தரப்புகளாக கண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் துன்புறுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேலும், தற்போது ஆட்சி பீடத்தில் உள்ள அரசாங்கம் தங்களுடைய முன்னாள் போராளிகளை நினைவேந்தும் உரிமையினை நிலை நிறுத்தி உள்ள நிலையில், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் மாத்திரம் மறுக்கப்பட்டு வருவது சமூக செயற்பாட்டாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
