சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம்: மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரிடம் சிஐடி விசாரணை
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு புனர் நிர்மானிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பாக சிஐடியினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம்(7) மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி சிஐடியினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை
இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி பிள்ளையான் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டு.மாநகர முதல்வருக்கு மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பாக என தலைப்பிடப்பட்டு அதில் கையொப்பம் இடப்பட்ட கடிதம் ஒன்றை கட்சி உறுப்பினர் ஒருவர் மாநகரசபை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளார்.
பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிஜடி யின் கீழ் இருக்கும் போது கடிதம் ஒன்று வெளிவந்ததுடன் அது முகநூலில் பிரசுரிக்கப்பட்ட நிலையில் சம்பவதினமான நேற்று முன்தினம் சிஐடியினர் மாநகரசபைக்கு சென்று மாநகரசபை முதல்வரிடம் இந்த கடிதம் தொடர்பான விசாரணை ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




