லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு வாபஸ் பெற்ற வழக்குகள் மீண்டும் தாக்கல்
லஞ்சம் ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் வாபஸ் பெறப்பட்ட 102 வழக்குகளில், 65 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2019 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் ஆணைக்குழு மொத்தமாக 102 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவற்றை மீளாய்வு செய்த பின்னர் 65 வழக்குகள் மீண்டும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாபஸ் பெறப்பட்ட வழக்குகளில் மேலும் 3 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்வது குறித்து தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அஜித் பி. பெரேரா, மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பெரும் சொத்துகள் மற்றும் பெரிய தொகை பணம் தொடர்புடைய வழக்குகள் எதுவும் இல்லை என என சுட்டிக்காட்டியுள்ளார்.
தரம், பதவி பார்க்காமல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதெனில் அது எவ்வாறு சாத்தியமாகும் எனத் தாம் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், தொடர்புடைய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்ட போதிலும், தற்போது அவர் ஜனாதிபதி பதவியில் இல்லாத நிலையில் ஏன் அந்த வழக்கு மீண்டும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அஜித் பி. பெரேரா கேள்வி எழுப்பினார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, தமது அரசு தரம், பதவி எதையும் பொருட்படுத்தாமல் சட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேக்கு எதிராகவும் எந்தத் தரப்பையும் பார்க்காமல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam