லஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டும் – நீதிமன்றின் உத்தரவு
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் முன்னிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு என தனியான சட்டம் எதுவும் இருக்க முடியாது என தெரிவித்துள்ளது.
நீதித்துறை நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு ஆணைக்குழுவிற்கு உள்ளது என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக சுட்டிக்காட்டியுள்ளார்.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்குத் துல்லியமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதைத் தவிர்த்து, "மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன" என்று மட்டும் வெறுமனே குறிப்பிடுவதைத் தவிர்க்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் அல்லது சாட்சியங்களின் சுருக்க அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியமை தொடர்பாக ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும்போதே தலைமை நீதவான் இதனைத் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் இரு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, அவர்கள் முழு ஆணைக்குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே நீதிமன்றம் கருதுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் தொடர்பாகத் தேவையான சரியான தகவல்களையும் சான்றுகளையும் சமர்ப்பிக்க அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தகவல்கள் சாட்சியங்களை சமர்ப்பிக்காமல் இருக்கக் கூடாது என நீதவான் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.