கையூட்டல் குற்றச்சாட்டுக்களில் அதிகம் கைதானவர்கள் எந்த அரச நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெரியுமா!
கையூட்டல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதிக அளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 9 மாதங்களில் கையூட்டல் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் சுற்றி வளைப்புகளின் மூலம் அதிக அளவில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் 20 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் ஆணைக்குழுவிற்கு 5776 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகள் அடிப்படையில் இந்த ஒன்பது மாத காலப்பகுதியில் 94 சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் 63 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த 94 சுற்றி வளைப்புகளில் 51 சுற்றிவளைப்புகள் வினைத்திறனான பலன்கள் கிடைத்தது எனவும் 37 சுற்றி வளைப்புக்களில் எதிர்பார்க்கப்பட்ட பலன் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கையூட்டல் மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலான விசாரணைகளின் ஊடாக மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த 9 மாத காலப்பகுதியில் கையூட்டல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மேல் நீதிமன்றில் 71 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையில் 86 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.