இயேசு பாலனின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்மஸ் சிறப்பு ஆராதனைகள்! (Video)
இன்றைய தினம் உலக வாழ் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று (25) நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.
மன்னார் மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடை பெற்றன.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.
இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது.
குறித்த ஆரானைகளின் போது கோவிட் அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் , நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.
கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் விசேட அதிரடிப்படை, இராணுவத்தினரும், பொலிஸாரும் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
இதன் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் திருப்பலி இடம் பெற்றது.
இதன் போது அருட் சகோதரர்கள் ,அருட்கன்னியர்கள் , குருக்கள் உட்பட மக்கள் மகிழ்வுடன் கலந்து கொண்டு இயேசு பாலன் ஆசீர் பெற்றுக் கொண்டனர்.
சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக இடம் பெற்றதோடு, பொலிஸ் இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் திருப்பலி இடம்பெற்றது.
[செய்திகள் : ஆஷிக்
மலையகம்
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களில் விசேட ஆராதனைகள் இயேசு பிறப்பையொட்டி கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் ஹட்டன் திருச்சிலுவை தேவலாயத்தில் இன்று (25) நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸ் அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.
தேவலாயத்திற்கு வெளியே பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : திருமால்
யாழ்ப்பாணம்
யாழ்.மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது ஆலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ள யேசு பாலகனின் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயர்களினால் ஒளியேற்றப்பட்டு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
இந்த நத்தார் நள்ளிரவு திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு யேசு பாலகனின் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று இரவு நத்தார் ஆராதனைகள் சுகாதார வழிமுறைகளைப் பேணியவாறு நடைபெற்றது.
மட்டக்களப்பு உப்போடை புனித லூர்து அன்னை ஆலயத்தில் நத்தார் விசேட ஆராதனைகள் நடைபெற்றது. புனித லூர்து அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை ஜேம்ஸ் சுரேஸ் தலைமையில் இந்த விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இதன்போது ஜேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது. நத்தார் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அருளாசி வழங்கப்பட்டது.
கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தது.
செய்திகள் : குமார்
வவுனியா
வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் பாலன் பிறப்பு நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
அந்தவகையில், வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் மறை மாவட்ட ஆயர் பொடித்தோர் ஆண்டகை தலைமையில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பாலன் பிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பரிமாற்றிக் கொண்டதுடன், பாலன் பிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
குறித்த தேவாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர். இதேபோன்று, வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் பாதுகாப்புக்கு மத்தியில் பாலன் பிறப்பு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் சிறப்பாக இடம்பெற்றது.
செய்திகள் : திலீபன்








அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
