கலவரபூமியில் கலைக்கட்டும் நத்தார் கொண்டாட்டம்(Video)
நாடளாவிய ரீதியில் நத்தார் கொண்டாட்டம் வெகுவிமர்சையாக இடம்பெறுகின்றது.
இந்நிலையில் கடந்த காலங்களில் கலவர பூமியாக இருந்த காலி முகத்திடலில் வித்தியாசமான முறையில் நத்தார் கொண்டாட்டம் இடம்பெறுகின்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆட்டம் கொண்டாட்டம் என பார்வையாளர்களை கவரும் வகையில் காலிமுத்திடல் ஜொலிக்கின்றது.
இங்கு பிரம்மாண்டமான முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ள நத்தார் மரம் உலகளவில் மக்களை நாட்டிற்கு வரவேற்கும் முகமாக 'visit srilanka' என்ற பதாதையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நத்தார் மரம் கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் சுமார் 30 அடி உயரத்தில் மரக்கறி வகைகளினால் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் வீட்டுத் தோட்டம் மற்றும் விவசாய செய்கையை பிரபல்யப்படுத்தும் நோக்கில் இந்த கிறிஸ்மஸ் மரம்உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நத்தார் மரத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி செடிகளைக் கொண்ட தொட்டிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மரக்கறி வகைகள், கீரை வகைகள், மிளகாய் உள்ளிட்ட பல வர்ண தாவரங்களினால் இந்த நத்தார் மரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த நத்தார் மரம் காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த மரக்கறி செடிகள் மக்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாகவும், பொரளை பகுதி பாடசாலை ஒன்றுக்கு ஒரு தொகுதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ராணுவ அணிவகுப்புடன் சாகசங்கள் நிறைந்த பல கலை நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
இவ்வாறு கண்ணை கவரும் வகையிலும், சிந்தனையை தூண்டும் வகையிலும் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு இடமாக காலிமுகத்திடல் மாறியுள்ளது.