இலங்கை வரும் சீன உளவு கப்பல்:கடும் சினத்தில் இந்தியா
சீனாவின் உளவு கப்பலான யுவான்வேங்க் 5 (அறிவியல் ஆய்வு கப்பல்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கணனி முகாமைத்துவம் மற்றும் ஆய்வு கண்காணிப்புக்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தி வெளியானதை அடுத்து இந்தியா தனது தென் பிராந்திய கடலில் கண்காணிப்பு ரோந்து பணிகளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சீன கப்பலின் வருகை தொடர்பில் பலத்த சந்தேகத்தில் இந்தியா
குறிப்பாக இலங்கையில் பொருளாதார, அரசியல் நெருக்கடி நிலவும் சந்தர்ப்பத்தை இலக்கு வைத்து இந்த சீன கப்பல், சீனாவின் பொறுப்பில் இருக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவது இந்தியாவுக்கு பலத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தி இகோனோமிக் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சீனாவின் கப்பல் எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 7 நாட்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நிலைக்கொண்டிருக்கும் என தெரியவருகிறது.
அத்துடன் இந்திய பெருங்கடலில் வடமேற்கு திசையில் ஒரு பகுதிக்குள் கணனி முகாமைத்துவம் மற்றும் ஆய்வு கண்காணிப்புக்காக கப்பல் தனது செய்மதி தொலைக்காட்சி கட்டமைப்பை கையாள முடியும் எனவும் இகோனோமிக் டைம்ஸ் கூறியுள்ளது.
2014 இல் இந்தியாவுக்கு கடும் சினத்தை ஏற்படுத்திய சம்பவம்
2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இப்படியான சீனாவின் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறை. 2014 ஆம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கி கப்பல், கொழும்பு துருறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்ததுடன் அது இந்தியாவுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியது.