இலங்கைக்கு பெரும் சிக்கலாக மாறும் சீன கப்பல் விவகாரம்! ரணிலின் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சீன கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இந்தியாவினால்,விரும்பத்தகாத அளவில் பார்க்கப்படுகிறது.
எனவே கடந்த மாதங்களில் இருந்த அதே அளவு உற்சாகத்துடன் விரைந்து உதவிகளை வழங்க இந்தியா, எவ்வளவு உற்சாகமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அரசியல் ஆய்வாளரின் கருத்து
இரட்டை எஞ்சின்களில் செல்லும் சீனா, முறையே இந்தியாவையும் அமெரிக்காவையும் தந்திரோபாய மற்றும் பொருளாதார முனைகளில் எதிர்கொள்ள இலங்கையை தேர்ந்தெடுத்துள்ளது என்று அரசியல் ஆய்வாளரான என்.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
உணவு, எரிபொருள் மற்றும் அந்நியச் செலாவணி என்று இலங்கை முறையிட்டபோது சீனா காது கேளாமல் இருந்த நிலையில் இந்தியாவே இலங்கைக்கு உதவியது. எனினும் பீய்ஜிங்கின் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் புது டெல்லி தலையிடக் கூடாது என்று சீனா இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் கூறியுள்ளது.
பீய்ஜிங்கின் கடன் இராஜதந்திரமே இலங்கையை திவால் நிலைக்கு இட்டுச் சென்றது அமெரிக்கா தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறது. இந்தநிலையில் தாய்வான் விடயத்தில் அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.
இலங்கை வரும் சீன கப்பல் இந்திய பெருங்கடல் மற்றும் விண்வெளி பகுதிகளில் இந்திய எல்லைக்கு அருகாமையில் மற்றும் அதற்கு மேல் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுமா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. எனினும் இலங்கை அரசாங்கத்திடம் சீனா இந்த விடயங்களை பகிர்ந்துக்கொள்ளுமா என்று ஆய்வாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணிலின் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
இதேவேளை சீன கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் தொடர்பாக ரணில் அரசாங்கம் விரும்பத்தகாத வகையில் பார்க்கப்படுவதால், கடந்த மாதங்களில் இருந்த அதே அளவு உற்சாகத்துடன் இந்தியா உதவிகளை வழங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இலங்கை மக்களுக்கு உதவ இந்தியா தயாராகவே உள்ளது. இதற்கு இலங்கை சீன கப்பல்
விடயத்தில் இந்தியாவுடன் தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.
இல்லையெனில் சீனா, இலங்கை மக்களுக்கு பாரியளவில் உதவுமா? அத்துடன் ஏற்கனவே
வழங்கியுள்ள கடன்களை சீரமைக்க அது தயாராக உள்ளதா? என்பதற்கு சீனா இதுவரை
பதில்கள் எதனையும் வழங்கவில்லை என்று அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.