சீன உளவுத்துறை கப்பல் விவகாரம்: கேள்விக்குறியாகும் இந்திய அரசாங்கத்தின் உதவிகள்- எச்சரிக்கும் இராதாகிருஷ்ணன்
சீனாவின் உளவுத்துறை கப்பல் இலங்கை வருவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
"தற்பொழுது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். குறிப்பாக அத்தியவசிய பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு என்பன முக்கிய விடயங்களாக மாறியிருக்கின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சீனா உடைய உளவு கப்பல் ஒரு வாரத்திற்கு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இது இன்றைய சூழ்நிலையில் எந்தளவு பொருத்தமாக அமையும். குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா? இதனை இந்தியா உட்பட ஏனைய நாடுகள் எவ்வாறான கண்ணோட்டத்துடன் பார்க்கும். குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றது.
இதனை அந்த நாடுகள் இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தலாக அமையுமா, அல்லது இந்திய பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக அமையுமா? என்பதை மிகவும் உண்ணிப்பாக இந்த நாடுகள் கவனித்து வருகின்றது.
இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஏனெனில் இந்தியா சீனாவுடன் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்ற சூழ்நிலையில் இந்த விடயத்தை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை மிகவும் உண்ணிப்பாக கவனத்து வருகின்றது.
இன்றைய சூழ்நிலையில் இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இலங்கைக்கு கிடைப்பது தடைப்படுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.
இலங்கை- இந்தியா
இந்திய அரசாங்கம் தற்பொழுது இலங்கைக்கு தொடர்ச்சியாக செய்து வருகின்ற உதவிகள் கேள்விக்குறியாகுமா? எனவே இந்த விடயத்தை இலங்கை அரசாங்கம் மிகவும் நிதானமாக கையாள வேண்டும்.
சீன கப்பல் எங்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களையோ, மருந்து பொருட்களையோ கொண்டு வருமாக இருந்தால் அதில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட போவதில்லை. மாறாக உளவு பார்க்கும் விடயத்திற்காக இலங்கை வருவது பலருக்கும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே இந்த விடயத்தை இலங்கை அரசாங்கம் நிதானமாக கையாளவிட்டால் பல்வேறு சிக்கல்களுக்கு எதிர்காலத்தில் நாம் முகங்கொடுக்க வேண்டி வரும். எனவே இதனை சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரும் சீன விஞ்ஞான ஆய்வு கப்பல்! உறுதிப்படுத்திய அரசாங்கம் |