உளவுப்பார்த்த குற்றச்சாட்டில் சீன செய்தியாளர் ஒருவருக்கு சிறைத்தண்டனை
உளவு பார்த்ததற்காக குற்றம் சுமத்தி, சீனாவின் அரசு ஊடகம் ஒன்றின் முன்னாள் செய்தியாளர் ஒருவருக்கு, சீனாவின் நீதிமன்றம் ஒன்றினால், ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
2022 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள 62 வயதான டோங் யுயு என்று இந்த செய்தியாளர், அமெரிக்கா மற்றும் ஜப்பானில் கல்வி மற்றும் செய்தித்தரப்பினருடன் தொடர்புகளை கொண்டிருந்தார்.
அத்துடன், வெளிநாட்டு தூதர்களையும் சந்தித்து வந்துள்ளார். இந்தநிலையில், அவர் பீய்ஜிங்கில் ஜப்பானிய தூதரக அதிகாரி ஒருவருடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சீன பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஜப்பானிய இராஜதந்திரி
கைது செய்யப்பட்ட நேரத்தில், டோங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய ஐந்து முக்கிய செய்தித்தாள்களில் ஒன்றான குவாங்மிங் டெய்லியின் மூத்த உறுப்பினராக பணியாற்றினார்.
2022 இல், பீய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் முடிந்த மறுநாள், அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டநிலையில் ஜப்பானிய இராஜதந்திரியும் தடுத்து வைக்கப்பட்டார்.
எனினும், பின்னர் ஜப்பானிய அரசாங்கத்தின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல மணி நேரம் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி, டோங் சந்தித்த இரண்டு ஜப்பானிய இராஜதந்திரிகள், ஜப்பானிய உளவு அமைப்பின் முகவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்
இதேவேளை, நேற்று (29.11.2024) வெள்ளிக்கிழமை டோங்கிற்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, பீய்ஜிங் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், 1989 இல், தியனன்மென் சதுக்கப் போராட்டத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் டோங்கும் ஒருவராவார்.
அவர், நியூயோர்க் டைம்ஸ் நாளிதழில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார், மேலும் பல ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் வருகை தரு விரிவுரையாளராகவும் செயற்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |