சீன மீன்பிடி கப்பலை மீட்கும் நடவடிக்கை: இலங்கை கடற்படையினரின் நிலைப்பாடு
கடந்த வியாழன் அன்று சர்வதேச கடற்பரப்பில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலை மீட்கும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் பங்கேற்பதா எனத் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுபெங் யுவான் யூ 028 ( Lu Peng Yuan Yu 028) என அடையாளம் காணப்பட்ட கப்பல் கவிழ்ந்ததையடுத்து, அதில் இருந்த 39 பணியாளர்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளிடம் சீன அரசு உதவி கோரியது. எனினும் இந்த சம்பவம் இலங்கையில் இருந்து 430 கடல் மைல் வெகு தொலைவில் சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளதால், உதவி வழங்குவது குறித்து முடிவு செய்யவில்லை என்று இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்
சீன தூதரகம் உதவியை நாடியபோது, இலங்கையிடம் கப்பல் எதுவும் இருக்கவில்லை.
இந்தநிலையில், அவுஸ்திரேலியாவை அண்மித்த பகுதியில் கப்பல் கவிழ்ந்துள்ளதாகவும், எனவே தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் பொதுவாக அந்த நாட்டினால் மேற்கொள்ளப்படும் எனவும் கப்டன் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த வியாழக்கிழமை, காணாமல் போன உறுப்பினர்களைத் தேடும் பணியில் இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.
தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவும் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியக் கடற்படையின் பி81 விமானம் குறித்த பகுதியில் விரிவான தேடுதலை மேற்கொண்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |