இலங்கையுடன் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள சீன உர நிறுவனம்
இலங்கையுடன் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள சீன உர நிறுவனம், இணக்கத்துக்கு மறுத்துள்ளதுடன், இரு தரப்பினருக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை இலங்கை மதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
கிங்டாவோ சீவின் பயோடெக் குழுமம் (Qingdao Seawin Biotech Group) என்ற இந்த நிறுவனம், 2022, பெப்ரவரியில் இரு தரப்பினருக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட துணை ஒப்பந்தத்தை இலங்கை அதிகாரிகளுக்கு நினைவூட்டியது.
2022 இல் தமது நிறுவனத்திற்கும் இலங்கை தரப்புக்கும் இடையே ஏற்பட்ட துணை ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பும் கரிம உரத் திட்டத்தைத் தொடரும்" என்று Qingdao Seawin Biotech குழுமத்தின் இயக்குநர் திருமதி. Song Hai Mei கூறியுள்ளார்.
இலங்கையின் குற்றச்சாட்டு

சீன நிறுவனம் தரமற்ற உரத்தை வழங்கியதாக இலங்கை குற்றம்சாட்டியதை அடுத்து இரண்டு தரப்பும் நீதிமன்றத்திற்கு சென்றன.
எவ்வாறாயினும், இரு தரப்பினரும் பின்னர் இலங்கை வர்த்தக உயர் நீதிமன்றத்தில் சமரசம் செய்துகொண்டதுடன், சீன நிறுவனம் சீனாவில் தொடரப்பட்ட வழக்கையும் வாபஸ் பெற்றுக்கொண்டது.
சீன நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமது நிறுவனம் செயல்திறன் பத்திரத்தை திரும்பப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுவது, உண்மைக்கு முரணானது என தெரிவித்துள்ள இயக்குனர், செயல்திறன் பத்திரம்(Perfomence Bond) காலாவதியான பிறகு தானாகவே செல்லுபடியாகாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் 2022 பெப்ரவரியில் எட்டப்பட்ட துணை ஒப்பந்தத்தின்படி, இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதை ஊக்குவிக்குமாறு இலங்கையில் உள்ள தொடர்புடைய தரப்பினரை தமது நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சீன நிறுவனத்தின் அறிவிப்பு

துரதிர்ஷ்டவசமாக, இலங்கையிடமிருந்து பதில் நேர்மறையானதாக உள்ளது என்று சீன நிறுவனம் கூறியுள்ளது.
இந்த திட்டத்தால் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கையின் செயலற்ற தன்மையால் இலங்கையில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை விவசாயிகளின் நலன்களுக்கும் சேதம் விளைவிப்பதாகவும் கிங்டாவோ சீவின் பயோடெக் குழுமம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சம்பந்தப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கரிம உரங்களுக்குப் பதிலாக இரசாயன உரம் வழங்கும் முன்மொழிவை சீன நிறுவனம் நிராகரித்துள்ளது.
இரு தரப்பு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டபடி, இரசாயன உரங்களுக்குப் பதிலாக கரிம உரங்கள் என்பதாலும், இரசாயன உரங்களை வழங்க வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இல்லை என்பதாலும், தங்கள் நிறுவனம் இந்த திட்டத்தை நிராகரித்துவிட்டது.
என்பதை
மீண்டும் வலியுறுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் தற்போதைய
ஏற்றுமதிக் கொள்கையின்படி இரசாயன உரங்களை ஏற்றுமதி செய்ய முடியாது” என்று
நிறுவனம் மேலும் கூறியுள்ளது.