ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நாடுகள் விதித்த தடைகள்: சீன வங்கிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு
ரஷ்யாவின் உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை சம்பந்தமாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் விதித்துள்ள தடை அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் மிகப் பெரிய அரச வங்கிகள், ரஷ்யாவிடம் இருந்து மூலப் பொருட்களை கொள்வனவு செய்வதில் நிதி கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வருவதாக தெரியவருகிறது.
அமெரிக்காவின் தடைகள் காரணமாக பிரதான ஆபத்தை எதிர்நோக்கும் சீனாவின் மிகப் பெரிய அரச வங்கியான ICBC மற்றும் Bank of China ஆகியன இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.
சொத்துக்களின் பெறுமதிக்கு அமைய உலகில் மிகப் பெரிய வங்கியாக கருதப்படும் ICBC மற்றும் சீனாவின் நிதி சந்தையில் மிகப் பெரிய வணிக வங்கியாக திகழும் Bank of China ஆகியவற்றுக்கு டொலரை கையாளும் சந்தர்ப்பம் இல்லாமல் போகலாம்.
ரஷ்யாவிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வது அந்நாட்டுக்கு நிதியுதவி அளிப்பதாக கருதப்படலாம். மோதல்கள் ஆரம்பமான நேரத்தில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய நட்பு நாடுகள், ரஷ்ய பொருளாதார துறைகளுக்கு தடைகளை விதித்து வருகின்றன.
ரஷ்ய அதிகாரிகளை கறுப்பு பட்டியலில் சேர்த்து வருகின்றன. மேலும் ரஷ்யாவில் இருந்தும் வெளியில் இருந்தும் நடத்தப்படும் ரஷ்யாவுக்கான விமான சேவைகளை நிறுத்த இந்நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அண்மைய வருடங்களில் சீனா, ரஷ்யாவிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்தது. ரஷ்யாவின் எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயுவில் சுமார் 30 வீதமான தொகையை உலகில் மிகப் பெரிய இரண்டாவது பொருளாதார நாடான சீனா இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறது.
பீஜிங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழாவில் கலந்துக்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளடீமிர் புட்டின், சீனாவின் நிதித்துறை மற்றும் எரிவாயு விநியோகத்துறையின் ஒத்துழைப்புகளை அதிகரிக்க இணக்கம் வெளியிட்டிருந்தார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெள்ளிக் கிழமை கொண்டு வந்த தீர்மானத்தை சீனா புறக்கணித்தது. ரஷ்யா உடனடியாக தனது படையினரை திரும்பப் பெற வேண்டும் எனவும் ஐ.நா கோரியது.