பொலிஸ் உத்தியோகஸ்தரின் ஏட்டை கிழித்த சீனப்பிரஜை கைது
வீதி வழித்தட விதி மீறல் குற்றம் சம்பந்தமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்த பேக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தரின் கடமைக்கு தடையேற்படுத்தி, தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் ஏட்டை கிழித்த சீனப்பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் 40 வயதான சீனப்பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வழித்தட விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்திய சீனப்பிரஜை

கொழும்பு கொள்ளுப்பிட்டி நகரில் நேற்று முன்தினம் வீதி வழித்தட விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்தியமை தொடர்பான காட்சிகளை கொழும்பு போக்குவரத்து கட்டுப்பாட்டு சீ.சீ.டி.வி கெமராக்களை கண்காணிக்கும் பிரிவினர் அவதானித்த பின்னர், அது குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதற்கமைய கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்தர், சந்தேக நபரான சீனப்பிரஜையை பின் தொடர்ந்து சென்று வாகனத்தை நிறுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்த போது, அவர் கடமைக்கு தடையை ஏற்படுத்தி, பதற்றமாக நடந்துக்கொண்டுள்ளார்.
சந்தேக நபர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்

இதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். கொள்ளுப்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.