அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் இறுகும் மோதல் போக்கு! தொடர் போர் பயிற்சியில் சீனா
சீன ராணுவம் தற்போது தாய்வானுக்கு அருகே மீண்டும் அதிக ராணுவப் பயிற்சிகளை அறிவித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவின் இந்த செயல்பாடு சீனாவிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகை நடத்தியது.
அதேவேளை, நீர்மூழ்கி மற்றும் கடல் தாக்குதல் நடவடிக்கைகளில் கூட்டுப்பயிற்சியினை மேற்கொள்வதில் கவனம் செலுத்துவதாக நேற்றைய தினம் சீனாவின் Eastern Theatre Command கூறியது.
இது தாய்வானின் பாதுகாப்புக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் வகையில் அமையும் என சில பாதுகாப்பு ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சீன ராணுவப் பயிற்சிகள் தடுக்காது
இந்நிலையில், நான்சியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாய்வானை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் அதிக ராணுவப் பயிற்சிகளை சீனா அறிவித்துள்ளது.
இதற்கு முன்பாக சீனாவின் ராணுவ அழுத்தத்தை மீறி தாய்வானுக்கு வருகை தருவதாக, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் பிரதம மந்திரி ரால்ப் கோன்சால்வ்ஸ் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தைபேயில் நடந்த வரவேற்பு விழாவில், தாய்வானில் உள்ள நண்பர்களைப் பார்க்க செல்வதை சீன ராணுவப் பயிற்சிகள் தடுக்காது என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.