இலங்கை மீண்டெழ சீனா முழு ஆதரவு! விஜித ஹேரத்திடம் வாங் யீ உறுதி
இலங்கையின் விரைவான மீட்சிக்கான முழு ஆதரவை சீன அரசு வழங்கும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ குறிப்பிட்டார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் விஜித ஹேரத் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை வரவேற்று, டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர அனர்த்த நிவாரணத்துக்காக சீன அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
இலங்கையின் மறுசீரமைப்பு
வர்த்தகம் மற்றும் முதலீடு, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக, டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையின் மறுசீரமைப்பு செயல்முறை குறித்த விவாதத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
சீன அரசின் உதவி
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அடையாளம் காணப்பட்ட வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை மறுசீரமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சீன அரசின் உதவியைக் கோரியுள்ளோம்.

அந்தக் கோரிக்கையில் தான் தனிப்பட்ட முறையில் தலையிடுவதாக அமைச்சர் வாங் யீ உறுதியளித்தார்.
இலங்கை விரைவான மீட்சிக்கான சரியான பாதையில் உள்ளது என்றும், அந்த நோக்கத்துக்காக சீன அரசு அதன் முழு ஆதரவையும் வழங்கும் என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார் என்றும் விஜித ஹேரத் பதிவிட்டுள்ளார்.