இலங்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த சீனாவின் புதிய திட்டம்
இலங்கையில் எரிபொருள் விநியோக மற்றும் விற்பனை செயற்பாடுகள் வெற்றியளித்தால், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹோங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர், அஸ்கிரிய பீட மகா நாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“நாம் அறிந்த வகையில் இலங்கை ஒரேயொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மாத்திரமே காணப்படுகிறது. அது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகும்.
அதன் இயந்திரங்களும் மிகப் பழமை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. எனவே புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை இலங்கை ஸ்தாபிக்க முடிந்தால் அது இலங்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றோம்.
இதனை அமைப்பதன் ஊடாக நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புக்களும் உருவாகும்.
இலங்கை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பது சீன பெற்றோலிய நிறுவனத்தின் தீர்மானமாகும்.
அரசாங்கம் என்ற ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதன் பிரதிபலன் நுகர்வோரையே சென்றடையும்
150 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்
மேலும் கடந்த வாரம் சீனாவின் சினொபெக் நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
அவரால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விரைவில், சீன எரிபொருளைக் கொண்ட 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்தால், நாளாந்தம் 4 மெட்ரின் தொன் மசகு எண்ணெண் சுத்திகரிப்பினை நாட்டில் முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றால், இவ்வாண்டுக்குள் 120 - 140 மில்லியன் டொலர் முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.”என தெரிவித்துள்ளார்.