ஹோர்முஸ் நீரிணையால் கதிகலங்கி நிற்கும் சர்வதேசம்.. பாரிய யுக்தியை கையாளும் சீனா!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூண்டு, உலகமே ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்படுமா என்று அஞ்சிக் கொண்டிருக்கும் வேளையில், சீனா சத்தமில்லாமல் ஒரு பாரிய எரிசக்தி புரட்சியைச் செய்து வருகிறது.
எண்ணெய் விநியோகத் தடைகளால் தனது நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை முற்றாக நீக்க சீனா 'சூப்பர் கிரிட்' (Supergrid) எனும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
உலக நாடுகள் கச்சா எண்ணெய்க்காக வளைகுடா நாடுகளை நம்பியிருக்கும் நிலையில், சீனா தனது முழுப் பொருளாதாரத்தையும் மின்மயமாக்கல் (Electrification) மூலம் மாற்றியமைத்து வருகிறது.
2026 முதல் 2030ஆம் ஆண்டிற்குள் சுமார் 4 ட்ரில்லியன் யுவான் (ஏறத்தாழ 574 பில்லியன் டொலர்கள்) இந்த மின்சாரக் கட்டமைப்புத் திட்டத்திற்காகச் செலவிடப்படவுள்ளது.
அதிஉயர் மின்னழுத்தப் பாதைகள் (UHV)
சீனாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள நிலக்கரி, காற்று மற்றும் சூரிய சக்தியை, தொழிற்சாலைகள் நிறைந்த கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் நீளமுள்ள 'மின்சார நெடுஞ்சாலைகளை' சீனா அமைத்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ள போதிலும், சீனா இந்த 'ஒயில் சோக்பொிண்ட்ஸ்' (Oil Chokepoints) எனப்படும் கடல்வழித் தடைகளைச் சார்ந்திருப்பதை வெகுவாகக் குறைத்து வருகிறது.
சீனாவின் போக்குவரத்துத் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் அனைத்தும் இந்தச் சூப்பர் கிரிட் மூலம் இயங்கும் வகையில் மாற்றப்படுகின்றன.

சீனாவின் அரசுக்குச் சொந்தமான 'ஸ்டேட் கிரிட் கார்ப்பரேஷன்' (State Grid) உள்நாட்டுச் சந்தையில் பில்லியன் கணக்கான டொலர்களைக் கடனாகத் திரட்டி இந்தத் திட்டங்களை மின்னல் வேகத்தில் முன்னெடுத்து வருகிறது.
"வளைகுடாவில் நடக்கும் போர், சீனாவின் இந்த மாற்றத்தை இன்னும் வேகப்படுத்தியுள்ளது" என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனா தனது நீண்டகால எரிசக்தி பாதுகாப்பிற்காக லாபத்தை விட, நாட்டின் கட்டுப்பாட்டிற்கே அதிக முன்னுரிமை அளிக்கிறது.
அமெரிக்கா தனது இராணுவ பலத்தைக் கொண்டு எண்ணெய் வழித்தடங்களைக் கட்டுப்படுத்த முயலும் வேளையில், சீனா அந்த வழித்தடங்களின் தேவையே இல்லாத ஒரு புதிய உலகத்தை உருவாக்கி வருவதாக சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.