கிளிநொச்சியில் கடற்றொழிலாளர்களுக்கு சீனா நன்கொடை அரிசி வழங்கும் செயற்றிட்டம்
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் சீனா அரசாங்கத்திடமிருந்து கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட அரிசி வழங்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கடந்த செவ்வாய்க்கிழமை(16) கனர வாகனமொன்றில் கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைந்துள்ளது.
அரிசி வழங்கும் திட்டம்
இந்நிலையில், குறித்த அரிசி வழங்கும் மாவட்ட நிகழ்வு பூநகரி கடற்றொழில் அலுவலகத்தில் நேற்றைய தினம்(24) காலை 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் மாவட்ட அபிவிருத்தி குழு இணைப்பாளர் இட்ணம் அமீன் கலந்து கொண்டு குறித்த செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கடற்றொழில் திணைக்களம் ஊடக 2,981 கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு இருபது கிலோ கிராம் அரிசி வீதம் வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து இந்த அரிசி பளை, கண்டாவளை, பூநகரி, நாச்சிக்குடா ஆகிய நான்கு கடற்றொழில் அலுவலகங்கள் ஊடக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பூநகரி கடற்றொழில் அலுவலக உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளத்தின் தலைவர், மாவட்ட அபிவிருத்தி குழு அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன், சீன அரசாங்கம் கடற்றொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மீன்பிடி வலை வழங்கல் மற்றும் வீட்டுத்திட்டம் முதலான செயறிட்டங்களை வாழ்வாதாரமாக வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





