பந்து இலங்கையின் கைகளில்! தனது முடிவை அறிவித்தது சீனா
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பந்து இலங்கையிடமே உள்ளது என்று சீனா கூறியுள்ளது.
இலங்கை, சீனாவிடம் பெற்ற கடன் தொடர்பில் சீனா வியத்தகு முடிவை எடுக்கவேண்டும் என்று அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள சீன தூதரக பேச்சாளர் ஒருவர்,
சீன வங்கிகளுடனான கடன் பிரச்சினை
சீன வங்கிகளுடனான கடன் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னரே இலங்கை நிதியமைச்சகத்திடம் சீனா தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விவாதிக்க சீனா, தமது வங்கிகளை ஊக்குவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் முன்னாள் இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதும் சீன நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
பரிந்துரைகள்
இலங்கையின் நிதி அமைச்சுக்கும் பரிந்துரைகளை அனுப்பப்பட்டன. எனினும் இலங்கையின் நிதியமைச்சிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
எனவே பந்து இலங்கையிடமே தற்போது உள்ளது என்று சீன தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மொத்த இருதரப்புக் கடன் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 6.2 பில்லியன் டொலர்களாக சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பான் மற்றும் சீனா
ஜப்பான் மற்றும் சீனா ஆகியன இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கியுள்ளன.
இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு இந்தியா சுமார் 4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது அத்துடன் இந்த ஆண்டு கடன் மற்றும் பரிமாற்றங்கள் மூலம் இலங்கையில் 14 பில்லியன் டொலர் சர்வதேச இறையாண்மை பத்திரக் கடனுக்கும் உள்ளாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.