AUKUS பாதுகாப்பு கூட்டாண்மைக்கு எதிராக சீனா போர்கொடி! - போரிஸ் ஜோன்சன் வழங்கிய பதில்
அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுடனான பாதுகாப்பு கூட்டாண்மை சீனாவுக்கு எதிரான நடவடிக்கை அல்லவென பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “AUKUS என்றழைக்கப்படும் இந்த திட்டம் வேறெந்த சக்திக்கும் எதிரியாக இருக்க விரும்பவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டாண்மையை (AUKUS) அறிவித்துள்ளது.
இந்த முயற்சி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உதவும் என்று குறித்த மூன்று நாடுகள் இடையே முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மையை உருவாக்குவதற்கான கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்கொட் மோரிசன் ஆகியோர் இந்த கூட்டு அறிவிப்பை வெளியிட்டனர்.
இதன்மூலம் மூன்று நாடுகளுக்கிடையேயான சந்திப்புகள் மற்றும் ஈடுபாடுகளின் புதிய கட்டிடக்கலை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பை வழங்கும்.
எவ்வாறாயினும், குறித்த மூன்று நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. “இது பிராந்திய பாதுகாப்பை “கடுமையாக” சேதப்படுத்துவதுடன், ஆயுதப் போட்டியைத் தூண்டும்” என்று சீனா கூறியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் முத்தரப்பு பாதுகாப்பு குழுவை கடுமையாக சாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மூன்று நாடுகளும் “பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாக சேதப்படுத்துகின்றன. ஆயுதப் போட்டியை தீவிரப்படுத்துகின்றன. அத்துடன், சர்வதேச அணு ஆயுத பரவல் முயற்சிகளை சேதப்படுத்துகின்றனர்” என்று ஜாவோ லிஜியன் கூறினார்.
மேலும், “இந்த நாடுகள் புவிசார் அரசியல் விளையாட்டுகளுக்கான அணுசக்தி ஏற்றுமதிகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது” என்று ஜாவோ லிஜியன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுடனான பாதுகாப்பு கூட்டாண்மை சீனாவுக்கு எதிரான நடவடிக்கை அல்லவென பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
"இது அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுடன் எமக்கு இருக்கும் நெருங்கிய உறவை பிரதிபலிக்கிறது, எங்களிடம் உள்ள பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் எங்களுக்கிடையேயான நம்பிக்கை அளவு ஆகியவை அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் இந்த அசாதாரண அளவிற்கு செல்ல உதவுகிறது என போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
மேலும் பிரித்தானியா சர்வதேச சட்டத்தை பாதுகாக்க உறுதியாக உள்ளது எனவும், அதுதான் உலகெங்கிலும் உள்ள எங்கள் நண்பர்களுக்கு நாங்கள் வழங்கும் வலுவான ஆலோசனை என்றும் போரிஸ் ஜோன்சன் மேலும் கூறியுள்ளார்.