யாழில் நன்னடத்தை பாடசாலையிலிருந்து தப்பியோடும் சிறுவர்கள்! பொலிஸார் தீவிர நடவடிக்கை
அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலையிலுள்ள சிறுவர்களை பணத்தைப் பெற்று அங்குள்ள காவலாளி தப்பிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரிடம் நாம் தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த காவலாளியின் வங்கி கணக்கை ஆராயாமல் அவரை கைது செய்ய முடியாது எனவும் வங்கி கணக்கை ஆராயும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
வங்கி கணக்கு
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நன்னடத்தைப் பாடசாலையிலிருந்து 13, 14 வயதுடைய மாணவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
இது தொடர்பில் நன்னடத்தைப் பாடசாலையின் அதிபரை தொடர்புகொண்டு வினவிய போது,
சிறுவர்கள் நன்னடத்தைப் பாடசாலையிலிருந்து தப்பிப்பதற்கு பெற்றோரால் காவலாளியின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக பெற்றேர் தம்மிடம் தெரிவித்ததாக அதிபர் கூறினார்.
பணி இடைநிறுத்தம்
தப்பிச்சென்ற சிறுவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையை தொடர்ந்து அன்றைய தினமே வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் அச்சுவேலிக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளியை பாடசாலை நிர்வாகம் பணி இடைநிறுத்தியுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: தீபன்



