குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் விட்டமின் D குறைபாட்டினால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று (09) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை காரணமாக மாணவர்கள் வெளியே சென்று விளையாடவோ அல்லது வேறு எந்த நடைமுறை செயல்பாடும் செய்யவோ அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் குழந்தைகளுக்கு விட்டமின் டி குறைபாடு ஏற்பட்டு எலும்பு வலியை ஏற்படுத்தும் ரிக்கெட்ஸ் உருவாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இணையம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் காரணமாக சிறுவர்கள் வெளியிலும் சூரிய ஒளியிலும் விளையாடுவது குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடு
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு விட்டமின் டி குறைபாடு காரணமாக இருப்பதாகவும், குழந்தைகள் வெயிலில் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், குழந்தைகளின் உடலில் விட்டமின் டி உற்பத்தி செய்ய காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை 15 முதல் 20 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் படும்படி வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் 1 வயதுக்கும் 4 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகள் அதிகளவில் விட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |