மன்னார் வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பதவி விலகல்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் எவ்வித முன் அறிவித்தல் இன்றி பணியில் இருந்து விலகியதால் வைத்திய சேவை பாதிப்படைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் தமது குழந்தைகளுக்கு உரிய முறையில் வைத்திய சேவையினை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம்-07 மற்றும் பிரசவிக்கின்ற குழந்தைகளுக்கான விசேட சிறுபிள்ளை வைத்திய நிபுணர் கடமையாற்றி வந்த நிலையில் பணியில் இருந்து விலகியுள்ளார்.
சிகிச்சைகள் தாமதம்
இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம் 7 இல் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான சிகிச்சைகள் தாமதம் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட தமது குழந்தைகளை யாழ்ப்பாணம் அல்லது வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே இவ் விடயத்தில் வடமாகாண ஆளுநர் உடனடியாக தலையிட்டு குறித்த வைத்திய நிபுணருக்கு பதிலாக ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆஸாத் எம்.ஹனிபா வை தொடர்பு கொண்டு வினவிய போது, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த சிறு பிள்ளைகளுக்கான வைத்திய நிபுணர் திடீரென கடமைக்கு சமூகமளிக்காது இருந்தார்.
அவர் தொடர்ச்சியாக கடமைக்கு வருகை தராத நிலையில் அவருடன் தொடர்பை ஏற்படுத்தினோம். எனினும் தான் வெளிநாடு செல்ல உள்ளதாகவும்,இதனால் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என தொலைபேசி வட்சப் ஊடாக கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்தவிடயம் தொடர்பாக நாங்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
இந்த நிலையில் தற்காலிகமாக வவுனியாவில் இருந்து ஒரு வைத்திய நிபுணரை கடமைக்கு அமர்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |