அதிகரித்து வரும் சிறுவர் கடத்தல்கள்: இராணும் மற்றும் பொலிஸார் தீவிர நடவடிக்கை (Photos)
மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் பதிவாகிவரும் நிலையில் மன்னாரில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட இராணும் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 6ஆம் திகதியும் நேற்றைய தினத்திலும் (08.05.2023) ஆள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த இரு சிறுவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபர், வலயக்கல்வி பணிப்பாளர், மன்னார் பொலிஸார், இரானுவத்தினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையை தொடர்ந்தே மன்னாரில் உள்ள பாடசாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் அதிகளவான பெற்றோர்களும் பிள்ளைகளுடன் பாடசாலைக்கு வருவதையும் மாணவர்கள் குழுக்களாக பயணிப்பதையும் வீதிகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த கடத்தல் முயற்சி தொடர்பில் நேற்றைய தினம் மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த கடத்தல் கும்பல் மற்றும் வாகனம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



