செட்டியார் தெருவில் இளைஞனை அடித்து இழுத்து சென்ற விவகாரம்! தொடரும் கைதுகளால் பதற்றத்தில் பலர்..
கொழும்பு செட்டியார் தெருவில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரை பொலிஸார் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலைமை தொடர்ந்து சுமார் 10 முதல் 15 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பல இளைஞர்களை பொலிஸார் தொலைபேசி ஊடாக அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அழைக்கப்பட்டவர்களில் பலர் வெவ்வேறு இடங்களில் இருப்பதால், நாளைய தினம்(28) பொலிஸ் நிலையத்திற்கு வருவதாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மனோ கணேசன்
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பல இளைஞர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், செட்டியார் தெரு விவகாரம் தொடர்பில் எவரையும் கைது செய்ய முடியாது எனவும், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தமக்கு உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் புறக்கோட்டை மற்றும் மாளிகாவத்தை பொலிஸார் தலையிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நாளை 28ஆம் திகதி காலை கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகர் மகேஸ் குமாரசிங்க தலைமையில் விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் தமது கடமையைச் செய்ய முடியும் என்ற போதிலும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது எனவும், அநீதிக்கு எதிராக அமைதியான முறையில் போராடுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செட்டியார் தெரு விவகாரம்
செட்டியார் தெருவில் தங்க நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மீது இரு பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் திகதி அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.
தங்க நகை திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்த பொலிஸார், அவர் அடையாளம் காட்டிய நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, குறித்த நபர் தவறாக அடையாளம் காட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த நபரை பொலிஸார் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியிலிருந்த நகைக்கடை வர்த்தகர்கள் பொலிஸாரைச் சுற்றிவளைத்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டதுடன், பல நகைக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
இதேவேளை, நகைக்கடை உரிமையாளரை பொலிஸார் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.