இலங்கையில் பதுங்கியிருந்து இந்தியா தப்பிய குற்றவாளியை கைது செய்த சென்னை பொலிஸார்
சென்னை மாநகரப் பகுதிகளில் கொலை, வெடிபொருட்கள் வைத்திருந்தல் மற்றும் ஆள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் தங்கியிருந்ததாக கூறப்படும் அவர், நேற்று(25.06.07) சென்னைக்கு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 47வயதான தௌபீக் ஹமீத் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளி விபரம்
2008 ஆம் ஆண்டு, இனவாத கலவரத்தைத் தூண்டும் வகையில் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் இவரும் ஒருவராவார்.இவர் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து நீதிமன்றம் 2021 இல் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை பிறப்பித்திருந்தது.
கொடுங்கையூர், எஸ்பிளனேடு, முத்தியால்பேட்டை, மீஞ்சூர், திருச்சி, அதிராம்பட்டினம், உத்தமநல்லூர் ஆகிய காவல் நிலையங்களிலும், கேரளா, மும்பை போன்ற பொலிஸ் நிலையங்களிலும் கொலை, வெடிபொருள் வைத்திருந்தமை, ஆள் கடத்தல் உள்ளிட்ட 14 குற்றவியல் முறைப்பாடுகள் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் சென்னை பொலிஸ் லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிட்டு விமான நிலையங்களுக்கு அறிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே அவர் கொழும்பில் இருந்து விமானம் மூலம் வந்த போது சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |