செம்மணியில் எதிர்பாராத மர்மங்கள்! அதிர்ச்சியூட்டும் தகவல்களை அம்பலப்படுத்திய சுகாஷ்
செம்மணியில் இதுவரை 55 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனாலும் இங்கே எதிர்பாராத மர்மங்கள் புதைக்கப்பட்டிருப்பதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(8) செம்மணிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இனப்படுகொலைக்கு எதிராக குரல்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசாமி பாலியல் படுகொலை வழக்கிலே சாட்சியாக இருந்த முன்னாள் இராணுவ சிப்பாய் சோமரட்ண ராஜபக்ச சொல்லியதைப்போல 600இற்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கே புதைக்கப்பட்டதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.
அந்த எண்ணிக்கை மேலும் கூடலாமே தவிர குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை. இவற்றுக்கு நீதியை பெறுவதற்கு நாங்கள் போராடுவதில் உறுதியாக இருக்கின்றோம்.
இந்த இடத்திலேயே நாங்கள் எமது மக்களிடம் முன்வைக்கின்ற கோரிக்கை என்னவென்றால் நீங்கள் அனைவரும் இந்த இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
செம்மணிக்காக எமது குரல்கள்
தாயக உறவுகள் மாத்திரம் அல்லாது புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற உறவுகளும் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் தான் இந்த செம்மணி புதைகுழிக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியும்.
செம்மணி என்பது வெறும் செம்மணி கிடையாது. தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகத்தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம்.
இது ஒரு குறியீடு. இத்தகைய குறியீடுகள் தமிழர் தாயகம் எங்கும் விதைக்கப்பட்டு புதைக்கப்பட்டு காணப்படுகின்றன. நாங்கள் செம்மணியை வைத்து எமது நீதி கோருகின்ற பயணத்தை பலப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் நாம் நமது இனத்திற்கான நீதியை என்றோ ஒரு நாள் பெற்றுக் கொள்ளலாம். இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை செம்மணிக்காக எமது குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.