அதிகமாக பேசப்படும் வைத்தியர் அர்ச்சுனா! வெளியான குடும்பப் பின்னணி
இராமநாதன் அர்ச்சுனா.. அண்மைய நாட்களாக ஊடகங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் பெயர்.
ஒரு வைத்தியரான இவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக பொறுப்பேற்ற ஒரு சில நாட்களில் வைத்தியசாலை நிர்வாகத்தில் நடந்த ஊழல்கள், குறைபாடுகள் போன்றவற்றை அம்பலப்படுத்தியதன் காரணமாக ஆதரவானதும், எதிரானதுமான பல விமர்சனங்களை சந்தித்தவர்.
வைத்தியர் அர்ச்சுனாவின் வெளிப்படுத்தல்களின் பின்னர் குறித்த வைத்தியசாலை தொடர்பில் பொதுமக்களும் கூட பல குறைபாடுகளை வெளியிட்டிருந்தனர்.
அர்ச்சுனாவிற்கு மக்களின் ஆதரவு
வைத்தியசாலையில் பெற்றுக் கொள்ள வேண்டிய மருந்துகளை வெளியில் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல், சிறு சிறு நோய்களுக்குக் கூட யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படுதல், கடமை நேரத்தில் வெளியில் சுற்றித் திரிதல் என்று அங்குள்ள வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இவ்வாறான நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவின் வெளிப்படுத்தல்களை அடுத்து வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும், அந்த வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர், ஊழியர்கள் மற்றும் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு முதல் வைத்தியசாலை வளாகத்தில் பொதுமக்கள் கடுமையான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மறுதினம் மதியம் வைத்தியர் அர்ச்சுனா வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து, வைத்தியர் அரச்சுனாவை கைது செய்யும் பொலிஸாரின் முயற்சி கைவிடப்பட்டது. அத்தோடு வைத்தியருக்கு இடமாற்றம் உறுதி செய்யப்பட்டு அவர் கொழும்புக்கு அழைக்கப்பட்டார். பொதுமக்களின் ஆதரவோடு மதியம் அவர் கொழும்புக்கு திரும்பினார்.
இந்தநிலையில், வைத்தியர் அர்ச்சுனா தொடர்பிலும் அவரது பதிவுகள் தொடர்பிலும் ஆதரவான மற்றும் சில விமர்சிக்கும் ரீதியிலான வாத பிரதிவாதங்களை சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது.
நான் ஒரு தமிழன்!!
இந்தநிலையில், வைத்தியர் அர்ச்சுனா தனது காணொளி ஒன்றில், தான் ஒரு தமிழன் என்றும், தனது குடும்பம் தமிழ் மக்களுக்காக வாழ்ந்த குடும்பம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், வைத்தியர் அர்ச்சுனாவின் தந்தை இராமநாதன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழீழ மக்களுக்காக சேவை செய்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தமிழீழ காவல்துறையில் முதன்மை ஆய்வாளராக இருந்த இராமநாதன் தமிழ் மக்களிடத்தில் அதிக நன்மதிப்பை பெற்ற ஒருவராகவும், இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் படுகாயமடைந்து வீரச்சாவடைந்த ஒருவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இராமநாதன் அவர்களின் ஏனைய இரு மகன்களும் கூட தமிழீழ காவல்துறையில் பணியாற்றியவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கு சுயநலமற்ற சேவைகளை வழங்கிய குடும்பத்தில் இருந்து வந்த ஒருவராக வைத்தியர் அர்ச்சுனா பார்க்கப்படும் நிலையில், அவரது தற்துணிவு, அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் உண்மைகளை பகிரங்கப்படுத்தியமை உள்ளிட்டவற்றை பொதுவெளியில் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும், தமிழ் மக்களிடம் மாத்திரமின்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் வைத்தியர் அர்ச்சுனா நன்மதிப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |