மன்னார் மடுக்கரை அருவியாற்று பகுதிக்கு சாள்ஸ் எம்.பி விஜயம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று காணி வழங்க நடவடிக்கை
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை அருவியாற்று பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்தினரின் ஆளுகைக்குக் கிராம மக்களின் காணிகள் உள்வாங்கப்படுவதனால் இக் கிராம மக்கள் பல ஆண்டுகளாகச் சிரமங்களை எதிர் கொண்டுவந்தனர்.
இது தொடர்பாக இக் கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்குக் கொண்டு சென்ற நிலையில், இன்றைய தினம் காலை குறித்த பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது நானாட்டான் பிரதேச செயலாளர் எம்.சிரிஸ்கந்தகுமார், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், நில அளவை திணைக்களத்தினர், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், கிராம அலுவலர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் குறித்த பகுதிகளுக்குச் சென்றனர்.
அந்த பகுதி ஆய்வு செய்யப்பட்டதுடன் குறித்த காணிகளுக்குப் பதிலாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்றுக்காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.







