கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்ட கட்டணம் அறவிடப்படாது
உயிரிழந்தவர்களின் உடலத்தினை எரியூட்டுவதற்கு இனி கட்டணங்கள் அறவிடப்படும் என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கோவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பூந்தோட்டம் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டு வருகின்றது.
எனினும் குறித்த எரியூட்டல் செயற்பாட்டிற்கு இதுவரை கட்டணம் அறவிடப்பட்டு வந்த நிலையில், இனிவரும் காலங்களில் கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் வறுமைக் கோட்டிற்குட்பட்டவர்களின் சடலங்களை எரியூட்டுவதற்குப் பணம் அறவிடப்படமாட்டாது எனவும் ஏனைய சடலங்களை எரியூட்டுவதற்கு 7000 ரூபா அறவிடப்படும்.
வறுமை நிலையினை உறுதிப்படுத்தும் விதமாகக் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர்களின் உறுதிப்படுத்தல் சான்றிதழ்கள் எமக்கு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அந்த சடலங்களைக் கட்டணம் இல்லாமல் எரியூட்டுவதற்கான அனுமதியினை மாத்திரம் நாம் வழங்குவோம்.
தற்போது கோவிட் இறப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இறந்த உடல்களை எரிப்பதற்கு சில மணி நேரம் தேவைப்படுவதனாலும், ஒரு உடலை எரித்து இரண்டாவது உடலை எரிப்பதற்கு இடையில் வெப்பம் தணியவிட ஒரு சில மணிநேரம் தேவையாக இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கோவிட் மரணங்களுக்குப் பணம் அறவிடப்படமாட்டாது என தவிசாளர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



