சனல் 4 விவகாரம் : நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் நியமனம்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு
மேலும், இந்தத் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் செயற்பட்டார் என முன்னாள் சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அரசு உத்தேசித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு விசாரணைகளின் நடவடிக்கைகள் நிறைவடைந்து இறுதித் தீர்மானத்துக்கு வருவதற்கு முன்னர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை என்பன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.