இலங்கையின் முக்கிய நகரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான அறிவிப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பொருட்டு இலங்கையில் அடையாளம் காணப்பட்ட பல நகரங்களின் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் பல அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
2,500 மில்லியனுக்கும் அதிகமான ரூபா செலவில், இந்த ஆண்டு பல அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அபிவிருத்தி திட்டம்
இதற்கமைய, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் விதிகளின் கீழ், 'நட்பு நகரங்கள்' திட்டத்தின் கீழ் 10 நகரங்கள் மற்றும் 25 சிறிய நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையில் மாதிரி நகரங்களாக அடையாளம் காணப்பட்ட கவர்ச்சிகரமான நகரங்களின் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் எடுத்துக்காட்டி, அவற்றை மறுஅபிவிருத்தி செய்வதற்கும், அபிவிருத்தி முத்திரைப்படுத்துதல் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே இந்த நகரங்களை மேம்படுத்துவதற்கும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1,300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் கீழ், அனுராதபுரம், கதிர்காமம், கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களின் அடையாளம் மற்றும் தனித்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக ஆலோசனை நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய 10 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த 2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முன்மொழிந்துள்ளது.
217 நகரங்களுக்கு முன்னுரிமை
இத்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம், மாத்தளை, ஹட்டன், மட்டக்களப்பு, சிலாபம், தம்புத்தேகமை , வவுனியா, எஹெலியகொட, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களில் 217 முன்னுரிமை அளிக்கப்பட்ட திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக அமைச்சரவையில் பல முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்த நிலையில் அவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.