கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
கடவுச்சீட்டை வழங்குவதற்கான குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 24 மணிநேர சேவையானது ஒரு நாள் சேவைக்காக மட்டுமே செயற்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட நீண்டகால கடவுச்சீட்டு தாமதங்களுக்கு தீர்வாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் தலைமை அலுவலகத்தை 24 மணி நேரமும் திறக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் மூலம், நேற்று கடவுச்சீட்டுகளைப் பெற வந்த வாடிக்கையாளர்களின் நீண்ட வரிசையில் குறிப்பிடத்தக்க அளவு குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம், அரசாங்க வேலை நாட்களில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்க திறந்திருக்கும் நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு பற்றாக்குறை
அதற்கமைய, சேவைகளைப் பெற வரும் மக்கள் மற்றும் சேவைகளை வழங்கும் அதிகாரிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பான அனைத்து அம்சங்களையும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஆய்வு செய்து, சேவைகளை வழங்கும் அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேவையான ஆவணங்கள்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்காலத்தில் பற்றாக்குறையின்றி கடவுச்சீட்டுகளை வழங்குவதை உறுதி செய்யுமாறும், கடவுச்சீட்டுகளைப் பெற வரும் விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் முறையான வரிசையில் கொண்டு வருவதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டைப் பெறும்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் ஏதேனும் பிழைகள் அல்லது தெளிவின்மைகள் காணப்பட்டால், அத்தகைய ஆவணங்களைப் பெறக்கூடிய பிற நிறுவனங்கள் திறந்திருக்கும் பகல் நேரங்களில் சேவைகளைப் பெற்ற பின்னர், கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தலைமை அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை தருமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam
