நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவில் மாற்றம்: பாதிக்கப்படவுள்ள சிறுபான்மைக் கட்சிகள்
தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின்
எண்ணிக்கையை குறைத்து, நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையை
அதிகரிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதால் சிறுபான்மைக் கட்சிகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்தல் மூலம் 196 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதோடு 29 உறுப்பினர்கள் மாவட்ட 'போனஸ்' ஆசனம் என்ற ரீதியிலும் தேசியப்பட்டியல் மூலமும் நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 160ஆகக் குறைத்து நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையை 65ஆக அதிகரிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
பரிசீலனை
இதற்கான திருத்தச் சட்ட வரைபு, சிறைச்சாலைகள், நீதி மற்றும் அரசமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கென, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் இந்தச் சட்ட வரைபு கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும்.
சிறுபான்மைக் கட்சிகள்
அதன் பின்னர், உரிய தரப்புகளின் ஆலோசனைகளைப் பெற்று பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 225 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இவ்வாறு நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது சிறுபான்மைக் கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணைக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |