முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
முல்லைத்தீவு (Mullaitivu) ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை பெறுபேறுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
எட்டு மாணவர்கள் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பம் (ICT) பாடத்தினை தெரிவு செய்து பரீட்சைக்கு தோற்றியுள்ள போதும் ஒரு மாணவர் மட்டுமே சித்தியடைந்துள்ளார். அவர் S சித்தி மட்டும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கணிணி வசதிகள் இருந்தும் குறித்த பாடத்திற்குரிய ஆசிரியர்கள் இருந்தும் அந்த பாடத்துறையில் வெற்றி பெற முடியாமை கவலைக்குரிய விடயம்.
தகவல் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பாரிய அனுகூலம் மிக்க பாடத்துறையாக இருக்கின்ற போதும் அந்த பாடத்துறையில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அக்கறையற்ற போக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கின்றது என சமூக விடய ஆய்வாளர் வரதன் இது தொடர்பில் அவரிடம் மேற்கொண்ட உரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார்.
பெற்றுக்கொண்ட பெறுபேறுகள்
2023ஆம் ஆண்டில் நடைபெற்றிருந்த உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்ப பாடப்பிரிவில் தகவல் தொழில்நுட்பத்தினையும் ஒரு பாடமாக தெரிவு செய்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை எட்டாக அமைந்துள்ளது.
அதில் ஒரேயொரு மாணவர் S சித்தியைப் பெற்றுள்ளார். இந்த பாட சித்தி வீதமாக ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம் 12.5 வீதம் பதிவு செய்துள்ளது.
ஏனைய ஏழு மாணவர்களின் தோல்வி கடந்து செல்லப்படவுள்ள ஒரு நிகழ்வாக அமையப் போவது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புவதோடு தங்களின் விசனத்தினையும் வெளிப்படுத்துகின்றனர்.
கற்பித்தல் செயற்பாடுகள்
வசதிகள் எல்லாம் இருந்தும் தோல்வியடைந்தது எப்படி என்ற கேள்வி ஆர்வலர்களுடையதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆசிரியருக்கான தேவை இருந்த போதும் இரு ஆசிரியர்களை ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்கென நியமித்திருந்தனர்.ஆயினும் அதிலொருவர் துணுக்காய் கல்வி வலயத்தினால் கணிணி வன்பொருள் வலையமைப்பு தீர்வுக்கான ஆளணிப் பிரிவுக்கு மாற்றி நியமிக்கப்பட்டுள்ளார்.
தனியொரு ஆசிரியர் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாக பாடசாலையின் நலன் சார்ந்து செயற்பட்டுவரும் பெற்றோர் கருத்துரைத்த போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாடத்தில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அவை சீர் செய்யப்பட வேண்டும்.அடுத்து வரும் பரீட்சைகளில் இத்தகைய தோல்வி ஏற்படுவதை தவிர்க்க பாடசாலை நிர்வாகம் நடவடிக்கைகளை எடுப்பதே பொருத்தமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாடத்தில் ஏற்பட்ட தோல்வி
வடமாகாண பாடசாலைகளில் நிலவி வருவதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் இதுவரை உரிய முறைப்படி விசாரித்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்காது காலம் கடத்திச் செல்லும் சூழலில் மாணவர்களின் சித்தியடைதலிலும் பாரியளவிலான வீழ்ச்சி ஏற்பாட்டு வருவதையும் சம நேரத்தில் நோக்கல் நன்று.
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் 100 வரையான கணினிகள் கற்றல் செயற்பாட்டுக்காக உள்ளன.இரு செயற்திட்டங்கள் ஊடாக அவை பாடசாலைக்கு உள்ளீர்க்கப்பட்டிருக்கின்றன.
13+ திட்டம் ஊடாகவும் ICT பாடசாலைக் கற்றல் திட்டம் ஊடாகவும் உள்ளீர்ககப்பட்ட கணினிகள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பாடசாலை நிர்வாகத்திற்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.கணிணிகள் பல பழுதடைந்ததோடு பல கணினிகளின் பகுதிகள் காணாமல் போயுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
நீண்ட நாட்களாக கணிணிக் கூடத்தினை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் மாணவர்களினால் முன்வைக்கப்பட்டு வந்துள்ள போதும் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தவறுகளை களைந்து கொள்ளாத போக்கு தற்போதும் பாடசாலையில் தொடர்ந்து வருவதாக ICT பாடத்தில் ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் கோட்ட போது பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விபரித்துள்ளார்.
தோல்விக்கான பொறுப்பு
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பம் பாடத்தில் ஏற்பட்ட தோல்விக்கான பொறுப்பை யார் ஏற்பது?
பாடசாலை நிர்வாகமா?அல்லது பாட ஆசிரியர் மட்டுமா? அன்றி வலயக்கல்விப் பணிமனை போன்ற கண்காணித்து செயற்படுத்தும் மேலதிகாரிகளைக் கொண்ட அலகுகளா? என்ற கேள்விக்கான விடைகளை பெற்றோர் ஆராய வேண்டும்.
இவற்றை விட பெற்றோர் தங்கள் பக்கம் உள்ள தோல்விக்கான காரணங்களை ஆராய முற்படுவதோடு தங்கள் பிள்ளைகளான மாணவர்களின் செயற்பாட்டு முயற்சிகள் பற்றியும் ஆராய முற்பட வேண்டும்.
உயர்தர கற்றல் செயற்பாடுகளுக்காக அதிகளவில் செலவாகும் பணம் மற்றும் நேரம் என்பவற்றை கருத்திலெடுத்தால் பரீட்சையில் பெற்றுக்கொள்ளும் சிறந்த பெறுபேறுகளே அவற்றுக்கான வெகுமதிகளாக அமையும் என்பதை இந்த முயற்சியோடு தொடர்புடைய அனைவரும் கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும் என்பதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கதாகும்.
வறுமையின் வாடிய பல மாணவர்களினால் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடிந்த போதும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளையோ அன்றி 100 வீத சித்தியையோ பெற்றுக்கொள்ள முடியாதது கவலையளிப்பதாக ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவருடன் இந்த நிலை தொடர்பில் கலந்துரையாடிய போது அவர் தன் கருத்தினை வெளியிட்டிருந்தார் என்பது நோக்கத்தக்கது.
அடுத்தடுத்த பரீட்சைப் பெறுபேறுகள்
பாடசாலையில் உள்ள குறித்த பாட ஆசிரியர் தன் கடமையினை சரிவர செய்ய முயலவில்லையோ என்ற கேள்வியை ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.
சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மாணவர்களை பயிற்றுவித்து அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுவிட்டால் நாம் ஏன் எதிர்க் கருத்துக்களைச் சொல்லப் போகின்றோம்.தங்கள் கடமையினை அவர்கள் சரிவரச் செய்தால் பாராட்டத்தான் செய்வோம் என ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் மற்றொரு பழைய மாணவர் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஆசிரியர் தன் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள ஏதேனும் சவால்களை எதிர்கொள்ள நேரிடின் அதிபர் அல்லது வலயக்கல்விப் பணிப்பாளர் அல்லது மாகாணக்கல்விப் பணிப்பாளர் என அடுத்தடுத்து முறையிட இருக்கும் ஒழுங்கு முறைகளைப் பயன்படுத்தி இருக்கலாம்.அல்லது தன்னால் தீர்க்க முடியாத சவால்களை ஊடகங்கள் ஊடாக பொது வெளியில் பேசு பொருளாக்கி இருக்கலாம்.
இங்கே வேண்டியதொல்லாம் ஒன்றே! மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் சிறந்த பெறுபேறுகள் மட்டுமே!
உயர்தர பரீட்சை
பௌதிக வளங்களை போதியளவில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட ஒரு சூழலில் எட்டு மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ள ஒரு ஆசிரியர் போதுமானதாகும். அவ்வாஷற இருக்கும் போது தோல்வி எப்படிச் சாத்தியமானது என பாடசாலை மாணவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் பாடசாலை நலன்விரும்பிகள் சிலரிடையே மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இம்முறை S சித்தியினை பெற்றுக் கொண்ட மாணவர் இரண்டாவது அமர்வில் உயர்தரப்பரீட்சையினை எழுதுபவராகவும் இருக்கின்றார்.எனினும் இதனை உறுதி செய்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது நோக்கத்தக்கது.
அடுத்தடுத்த வருடங்களில் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைகளில் இந்த பாடத்தெரிவினை மேற்கொண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் வெற்றியடைய தேவையான முயற்சிகளை உரிய தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த தோல்வி சுட்டிக்காட்டுவதாக அமைவதும் இங்கே நோக்கத்தக்கது.
உரிய தரப்பினர் எல்லோருமாக ஒன்றிணைந்து மாணவர்களின் வெற்றி நோக்கி பயணிக்க முயற்சிப்பார்களா? அடுத்த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை காத்திருந்து தான் அவர்களது முயற்சியின் வெற்றியை பார்க்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |