ரணில் தொடர்பில் கூட்டமைப்பை எச்சரித்த சந்திரிக்கா! காலம் கடந்து வெளிவரும் தகவல்கள்
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் தரப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் எங்களை எச்சரித்திருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ரணில் - மைத்திரி தரப்பை நம்ப வேண்டாம் என்றும் எழுத்து மூலமான உறுதியை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் சந்திரிக்கா அம்மையார் எம்மிடம் கூறினார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட் டலஸ் அழகப்பெரும - சஜித் கூட்டணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமை தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.
எழுத்து மூலமான ஆவணம்..
ஜனாதிபதி போட்டியிலே பிரதானமாக இரண்டு பேர் போட்டியிட்டிருந்தனர். ரணில் விக்ரமசிங்க எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயாவுடன் தொலைபேசி ஊடாக பேசியிருந்தார் என்று சம்பந்தன் ஐயா எங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதேநேரம் சஜித்தும் நீண்ட பல தொடர்புகளைக் கொண்டிருந்தார். ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலமான ஆவணங்களை தருவதற்கோ, நடைமுறை சார்ந்த தமிழர்களின் பிரச்சினையை பேசுவதற்கோ தயாரில்லை. ஆனால் டலஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் எங்களை சந்தித்து எழுத்துமூலமான உறுதி மொழிகளை எங்களுக்குத் தந்தார்கள்.
எங்களது முக்கியமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் எழுத்து மூலமான உறுதிமொழியை தந்த பின்னரே நாங்கள் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்தோம்.
ஆனால் சிங்களத் தலைவர்கள் எவருமே நாங்கள் நம்பக்கூடிய வகையில் நடந்து கொள்ளவில்லை. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எழுத்தில் தந்த எத்தனையோ ஒப்பந்தங்களை கிழித்தெறிந்த வரலாறுகள் எல்லாம் உண்டு.
ஆனால் நாங்கள் வாக்களிக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக நாங்கள் எங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கான உறுதிமொழிகளைத் தருபவர் யார்? சாதாரண விடயங்களையாவது நடைமுறைப்படுத்த முடியுமே என்பதை சிந்தித்தே எழுத்துமூலமான ஒப்பந்தத்தினைப் பெற்றுக்கொண்டோம்.
குறைந்தபட்சம் டலஸ் வென்றால் நல்லெண்ண அடிப்படையில் ஒரு 25 அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்வார்கள் என்ற எண்ணத்திலேயே ஆதரவு வழங்க முடிவு செய்யப்பட்டது. எனவே அவர்களுக்கு கொடுத்த நம்பிக்கைக்கு நாங்கள் துரோகம் இழைக்கவில்லை.
பேரம் பேசும் கருவியாக மாறிய வாக்குகள்..
இந்த ஜனாதிபதி தெரிவு செய்யும் வாக்கு என்ற ஆயுதம் எங்களுக்கு இருக்கின்றது. பேரம் பேசும் ஒரு கருவியாக அது எங்களுக்கு கிடைக்கின்றது. அவர்களுடன் பேரம் பேசும் வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொள்கின்றோம். நாங்கள் அதை ஏன் நிராகரிக்க வேண்டும்.
எங்களுக்குத் தெரியும் சில சமயங்களில் அவசரத்தில் எழுத்து மூலம் கொடுத்து விட்டு நாளை அதனை மறுக்கலாம். எழுத்து மூலம் வாங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் நடக்கும் என்று உத்தரவாதத்தினை நாங்கள் கொடுக்க முடியாது. வரலாற்றில் இது ஒரு ஆவணம்.
சஜித் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அவர் வென்றிருந்தால் பிரதமராகியிருப்பார், டலஸ் வென்றிருந்தால் ஜனாதிபதி ஆகியிருப்பார். அவர்கள் எமக்கு தந்த உறுதிமொழிகளுக்கான ஆவணத்தை நாங்கள் நாளை சர்வதேச சமூகத்திற்கும் காட்ட முடியும். இதனை ஒரு வரலாற்று ஆவணமாக நாங்கள் இதனை பயன்படுத்த முடியும்.
தற்போது அவர்கள் தோற்றுவிட்டார்கள், ஆனால் வென்றிருந்தால், வென்றபின்னர் எங்களை ஏமாற்றியிருந்தால், மறுத்திருந்தால் அதனை வரலாற்று ரீதியான கருவியாக நாங்கள் பயன்படுத்தியிருக்க முடியும். நாங்கள் கடந்தகால அனுபவங்களையும் எங்களிடம் இருந்த பல்வேறுபட்ட நெருக்கடிகளையும் கற்றுக்கொண்ட பாடங்களையும் அடிப்படையாக வைத்துத் தான் எழுத்துமூலமான ஆவணத்தை இம்முறை நாங்கள் கேட்டிருந்தோம்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் கூட ரணில் - மைத்திரி அரசுக்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம் என்ற நிலை வந்தபோது நான் கேட்டிருந்தேன் எழுத்துமூலமான ஆவணத்தை நாங்கள் பெற்றுக்கொள்வோம் என்று. அப்போதும் சம்பந்தன் ஐயா கூறியிருந்தார் நாங்கள் உங்களை நம்புகின்றோம், நீங்களும் எங்களை நம்புங்கள் என கூறியிருந்தார்.
அப்போதும் கூட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் ரணில் கூட்டணி தொடர்பில் எங்களை எச்சரித்திருந்தார். இவர்களை நம்பாதீர்கள் எழுத்துமூலமான உறுதிமொழியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று எம்மை கூறியிருந்தார். எனவே எங்களுக்கு ரணில் - மைத்திரி கூட்டணி குறித்த ஒரு பாடம் இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
You My Like This Video