அனுமதியின்றி பெயரை பயன்படுத்துவதாக சந்திரிக்கா குற்றச்சாட்டு
அனுமதியின்றி தமது பெயரை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்நாயக்கவிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் கதிரை சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர்கள் தமது புகைப்படத்தை துண்டுப் பிரசூரங்களில் அனுமதியின்றி பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
லசந்த அலகியவன்ன மற்றும் சரண குணவர்தன ஆகியோரின் புகைப்படங்களுடன் தனது புகைப்படத்தையும் பிரசார நோக்கில் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
தமது பெயரையோ புகைப்படங்களையோ எந்தவொரு காரணத்திற்காகவும் பயன்படுத்த வேண்டாம் என கதிரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தனது அதிகாரபூர்வ கடிதத் தலைப்பில் இது தொடர்பிலான கடிதமொன்றையும் சந்திரிக்கா வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்துவதனை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும், அது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.