முத்தமிழ் விழாவில் கலந்துக் கொண்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
சுவாமி விபுலானந்தர் அவர்களின் 79 ஆவது நினைவு தினத்தையும், 102 ஆவது துறவற ஆண்டினையும் முன்னிட்டு, மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழா, 19.07.2026 அன்று மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
முத்தமிழ் விழா
அதேவேளை, புத்தசமய, கலாசாரங்கள் மற்றும் சமய விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க அதிதியாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.
விழாவின் ஆரம்ப நிகழ்வாக, மாணவர்களின் கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் சுவாமி விபுலானந்தரின் நினைவைப் போற்றும் ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் பிரதம அதிதிகளுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டதுடன், சுவாமி விபுலானந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் முத்தமிழ் கலைநிகழ்ச்சிகள், இசை, நடனம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.
இராமலிங்கம் சந்திரசேகர்
விபுலானந்தர் நினைவாக பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட முத்தமிழ் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், சமூக சேவையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது பிரதம அதிதி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சுவாமி விபுலானந்தர் தமிழ் மொழி, கலை, கல்வி மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகள் கடந்து நினைவுகூரப்பட வேண்டிய பெரும் பாரம்பரியமாகும் என்றும், இளம் தலைமுறையினரிடையே தமிழ் மொழி, முத்தமிழ், ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வளர்க்கும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், அரச அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


